சிங்கங்களின் கர்ஜனையில் மண்டியிட்டது இந்தியா ; 27 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இலங்கை
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 3ஆவதும் இறுதியுமான போட்டியில் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க வெல்லாலகே சுழலில் இந்திய துடுப்பாட்ட வரிசையை அள்ளிச் சுருட்ட 110 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி 27 வருடங்களுக்குப் பின்னர் ஒருநாள் தொடரை 2:0 என வெற்றி கொண்டு அசத்தியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இலங்கை அணியின் அசத்தலான சுழலினால் சமநிலையில் முடிந்தது. பின்னர் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற தீர்க்கமான 2ஆவது போட்டியில் ஜெப்ரி வெண்டர்சியின் மிரட்டலான சுழல் பந்துவீச்சு கைகொடுக்க 32 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. அதற்கமைய இத் தொடரின் 3ஆவதும் இறுதியுமான தொடரை தீர்மானிக்கும் போட்டி இன்று (7) பகலிரவு ஆட்டமாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இப்போட்டியினை வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ இலங்கை அணி 27 வருடங்களின் பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றெடுக்கும் என்ற நிலையிலும், மாறாக இந்திய அணி வெற்றி பெற்றால் அவ்வணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெறும் 100ஆவது வெற்றியாகவும் காணப்பட்ட மிக முக்கியமான போட்டியாக இது அமைந்திருந்தது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி கடந்த போட்டியில் பங்கேற்ற அகல தனஞ்சயவிற்கு ஓய்வு வழங்கி மகேஷ் தீக்சனவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. அதேபோன்று இந்திய அணி ராகுல் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோருக்கு பதிலாக ரிஷப் பாண்ட் மற்றும் அறிமுக வீரரான ரியான் பராக் ஆகியோரை களம் இறக்கியிருந்தது,
அதற்கமைய நாணயச்சுழற்சியில் 3ஆவது முறையாகவும் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான சரித் அசலங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார். அதற்கமைய களம் நுழைந்த ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஷங்க மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி இலங்கை அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. இந்த ஜோடி தமக்கிடையில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க பெத்தும் நிஷங்க 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்திலிருந்த அவிஷ்க அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து அரைச்சதம் கடக்க , அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை கொடுத்தார் குசல் மெண்டிஸ். இந்த ஜோடி தமக்கிடையில் 82 ஓட்டங்களை பெற்றிருக்க 4 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட அpஷ்க 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் அரைச்சதம் கடந்திருந்த குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களுடன் வெளியேற மீண்டும் இலங்கை அணியின் மத்திய மற்றும் பின்வரிசை நிலைக்காமல் போனது. இருப்பினும் இறுதிரை நம்பிக்கை கொடுத்த கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அறிமுக வீரரான ரியான் பராக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இலங்கை அணி நிர்ணயித்த 249 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இந்திய அணிக்கு ஆரம்ப ஜோடியான ரோஹித் மற்றும் கில் ஜோடி 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருக்க கில் 7 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் அணியின் தலைவரான ரோஹித் 35 ஓட்டங்களுடன் வெளியேற , அணியை தூக்கி நிறுத்தூர் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான கோஹ்லி (20)ஸ்ரேயஸ் ஐயர் (8), அக்ஷர் படேல் (2) என வெல்லாலகேயின் சுழலில் தொடரான பெவிலியன் திரும்ப மற்றைய வீரர்களான பாண்ட் மற்றும் பராக் ஆகியோரும் நிலைக்காமல் போக இறுதியில் வந்த வாசிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களை பெற்று ஆறுதல் கொடுக்க இந்திய அணி 26.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 110 ஓட்டங்களால் மிகப் பெரிய தோல்விக்கு முகம் கொடுத்தது.
இதனால் இலங்கை அணி தொடரை 2:0 என வெற்றி கொண்டதுடன் 27 வருடங்களில் பின்னர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றி கொண்டு அசத்தியது. இப்போட்டியில் தோற்று தொடரை இழந்தமையால் தரப்படுத்தலில் முதலிடத்திலிருந்த இந்திய அணி 2ஆம் இடத்திற்கு கீழிறங்கியது. பந்துவீச்சில் வெல்லாலகே 5 விக்கெட்டுக்களை அள்ளிச்சுருட்டினார்.
(அரபாத் பஹர்தீன்)