உள்நாடு

பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கு  STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்..!

2023 ஜூலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக STEM பாடங்களை  (பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், ஆங்கிலம் ,மற்றும் உயிரியல்) கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றுக்காக  இந்திய அரசாங்கத்தின் பல் நோக்கு நன்கொடை உதவி திட்டத்தின்கீழ் 750 மில்லியன் இந்திய ரூபா அறிவிக்கப்பட்டதுடன் இத்திட்டம் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் 2024 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இந்த திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே, கல்வி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவகம், இந்தியாவைச் சேர்ந்த ஆசிரிய பயிற்றுனர்கள், மற்றும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்,

குறித்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் ஆதரவின் கீழ் STEM பாடவிதான பயிற்சிகளை வழங்குவதற்காக அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 19 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து 2024 ஜூலை 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் கல்வி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியவை 22 ஜூலை முதல் 02 ஆகஸ்ட் வரை நடத்திய வழிகாட்டுகை அமர்வுகளில் அவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த அமர்வுகளில் இரு அமைச்சுகளின் சிரேஸ்ட அதிகாரிகளுடனான உரையாடல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கான கள விஜயங்கள், தேசிய கல்வி நிறுவகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட தெளிவூட்டல் அமர்வு ஆகியவையும் உள்ளடங்கியிருந்தன. 29 ஜூலை நடைபெற்ற தெளிவூட்டல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கல்வித் துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ அ அரவிந் குமார் அவர்களும் கல்வி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளும் உரை நிகழ்த்தியிருந்தனர். இந்த வழிகாட்டுகை செயற்பாடுகளின் முக்கிய இலக்குகளாக, பாடவிதான மீளாய்வு, இத்திட்டத்தின் மனிதவள மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் குறித்த ஆழமான புரிதலை அடைதல், திட்டத்தின் பெறுபேறுகள் குறித்த எதிர்பார்ப்பு, இலங்கை கல்வித் திட்டம் குறித்த புரிதல், கற்பித்தல் முறைமைகள் மற்றும் நுட்பங்கள் குறித்த புரிதலை அடைதல், இந்திய பாடத்திட்டத்தில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிதல் மற்றும் வெற்றிகரமான திட்டத்தை உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகளை உருவாக்குதல் மற்றும் அத்திட்டத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஸ்திரமான பலன்கள் ஆகியவற்றைக் கண்டறிதல்  போன்ற விடயங்கள் காணப்பட்டிருந்தன.

இந்த 10 வாரகால ஆசிரிய பயிற்சி திட்டத்திற்காக பெருந்தோட்ட பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் தமது சேவைகளை வழங்கவுள்ளனர். பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளின் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு குறித்த இந்திய ஆசிரியர் பயிற்றுனர்கள் குழாமை உரிய வகையில் பயன்படுத்துவதற்காக ஒரு வினைத்திறன் மிக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள 40 நிலையங்களில் இந்த ஆசிரியர்களால் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் அதேவேளை மேல், தெற்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள சில நிலையங்கள் மெய்நிகர் மார்க்கமூடாக இந்த அமர்வுகளில் இணையவுள்ளன. இந்த திட்டத்தின் வெற்றிகரமான நிறைவின்போது பெருந்தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இதன் மூலமாக பயனடைவார்கள்.

கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், வாழ்வாதாரம், புதுப்பிக்கதக்க சக்தி, துறைமுகம், ரயில்வே, மற்றும் ஏனைய பல துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இலங்கை அரசினால் பரிதுரைக்கப்படும் முன்னுரிமைகள் மற்றும் இலங்கை மக்களின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இலங்கையில் மக்களை இலக்காகக் கொண்டும் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பங்குடைமை முயற்சிகளின் நீண்ட பட்டியலில் குறித்த பயிற்சித்திட்டமும் உள்வாங்கப்படுகின்றது.

 

(இந்திய உயர் ஸ்தானிகராலயம்- கொழும்பு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *