கல்முனை ஸாஹிரா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவு
இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் ரிட்ச்பரி நிறுவனத்தின் அனுசரணையில் நாடுபூராக நடைபெறும் 53 ஆவது (Sir John Tarbat) சேர் ஜோன் ராபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர்.எம். பதாஹீ பாதிக் 14 வயதுப் பிரிவு ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட ஆரம்ப சுற்றுப் போட்டிகள் (03) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றன.
இச்சாதனை நிலை நாட்ட ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS), இணைப்பாட விதான செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்சீல் மற்றும் மாணவனைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்றாஜ் றிழா மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், இப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், போட்டிக்காக அழைத்துச் சென்ற பாதுகாவலர் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவனுக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)