வாழைச்சேனை அந்நூரியன்ஸின் 91 நண்பர்கள் வட்டத்தின் முன்மாதிரி 12 லட்சம் செலவில் நிழல் கூடை..!
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் கற்ற 91 மாணவர்களின் அந்நூரியன்ஸின் (91) நண்பர் வட்டத்தினால் பாடசாலையின் மாணவர்களின் நலன்கருதி 12 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான நிழல் கூடை (Bicycle Parking) திறக்கும் வைபவம் 05.08.2024 அன்று திங்கட்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.ப.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதைய ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.எம்.எம்.தாஹிர் கொண்டார்.
அத்துடன், அந்நூரியன்ஸின் (91) அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க நிறைவேற்றுக்குழு (SDEC) உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
துவிச்சக்கர வண்டிகளுக்கான நிழல் கூடை (Bicycle Parking) திறந்து வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் அந்நூரியன்ஸின் (91) அமைப்பினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
இப்பாடசாலையின் வரலாற்றில் மிக அதிகமான நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.
அந்நூரியன்ஸின் (91) பழைய மாணவர் அமைப்பு பாடசாலையின் நலனில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதைப்போன்று அனைத்து பழைய மாணவர் சங்கங்களுக்கும் செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையும் பாடசாலை நிருவாகத்தினால் முன்வைக்கப்பட்டது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)