எகிப்து மாநாட்டில் உலமா சபைத் தலைவர் பிரதிநிதிகள் பங்கேற்பு..!
எகிப்திலுள்ள உலக ஃபத்வா கவுன்சில்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வேகமாக மாற்றமடைந்துவரும் உலகில் ஃபத்வாக்களும் பண்பாடுகளும்’ எனும் தொனிப்பொருளிலான இரு நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடானது எகிப்தின் தலைமை முஃப்தி கலாநிதி ஷவ்கீ அல்லாம் அவர்களது தலைமையில் 2024 ஜூலை 29 மற்றும் 30ஆம் திகதிகளில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளின் முஃப்திகள், மார்க்க அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்த குறித்த சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும் ஃபத்வாக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அக்ரம் அபுல் ஹஸன் மதனி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஃபத்வா, பண்பாடு, சர்வதேசம் ஆகிய முக்கிய மூன்று கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட இம்மாநாட்டின் பிரதான நோக்கம் ஃபத்வாக்கள் மற்றும் பண்பாடுகள் ஆகியவற்றிற்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை சர்வதேசத்தற்கு எடுத்துக் கூறுவதும், அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றன என்பதை ஆதாரங்களுடன் சர்வதேசத்திற்கு முன்வைப்பதுமாகும்.
இப்பிரதான நோக்கங்களின் அடிப்படையில், ஃபத்வாக்களுக்கும் பண்பாடுகளுக்கும் இடையில் பிரிநிலை காணமுடியாது என்பதை நிரூபிக்கும் அறிவியல்ச் சான்றுகள் தொகுக்கப்பட்டு வெளியீடுகளாக மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கும் முஃப்திகள் மற்றும் மார்க்க அறிஞர்களின் முக்கியத்துவம் பற்றி சுட்டிக்காட்டப்பட்டதோடு தீர்ப்புகளை வழங்கும்போது ஃபத்வா, பண்பாடு, சர்வதேசம் ஆகியவை கருத்திற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியமும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இஸ்லாம் பண்பாடுகளுக்கு வழங்கியிருக்கும் முக்கியத்துவம் தொடர்பில் இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டதோடு ஃபத்வா வழங்கக்கூடியவர்கள், மார்க்க அறிஞர்கள் அவற்றை கடைப்பிடித்து ஒழுகவேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
முக்கியமாக, இம்மாநாட்டில் பலஸ்தீன் மற்றும் காஸா பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டதோடு, அவர்களுக்கான நீதியான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க சர்வதேசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.