மீண்டும் வெடித்த போராட்டம்; நாட்டை விட்டு வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா
பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் மீண்டும் தீவிரமடைந்த போராட்டங்களில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசினாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல் வெடித்தது.
சமீபத்தில் மாணவர் தலைவர்கள் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை அறிவித்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்தது. சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
பங்களாதேஷில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் 200 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பங்களாதேஷ் ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.
இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாடு ஒன்றுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் ஊடக தகவல்களின்படி, இந்தியாவுக்கு தான் ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் தப்பியிருப்பதாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் இருவரும் தஞ்சமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.