ஒலிம்பிக் போட்டிகளின் 400M ஓட்டப் போட்டியின் அரையிறுதியில் இலங்கையின் அருண
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 9ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நேற்று இலங்கை வீரர் அருண தர்ஷன, இலங்கை நேரப்படி இரவு 10.35 க்கு இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியின் 5ஆவது ஹீட் சுற்றை 44.99 வினாடிகளில் கடந்து 3ஆவது இடத்தைப்பிடித்ததுடன் அரையிறுதிக்கும் தகுதிபெற்றுள்ளார்.
இவர் திருகோணமலையிலுள்ள சேருவில என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் ஆரம்பத்தில் தனது படிப்பை கந்தளாயில் உள்ள தெஹிவத்தை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார், பின்னர் அவர் அக்குரம்பொடவில் உள்ள வீரகேப்பெட்டிபொல தேசிய பாடசாலையிலும் பயின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. தற்சமயம் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்று அரையிறுதிக்குத் தெரிவாகியிறுப்பதை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
உலக தரவரிசையில் 51ஆவது இடத்தில் உள்ள அருண தர்ஷன, ஆரம்ப சுற்றின் 05வது கட்டத்தில் போட்டியிட்டார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவரது தனிப்பட்ட சாதனை 45.30 வினாடிகள் ஆகும். அதனை தகர்த்து நேற்று தனது சிறந்த வினாடிப்பிரதியையும் நிலைநாட்டினார் அறுண தர்ஷன.