உள்நாடு

பொத்துவிலில் சர்வதேச தரத்திலான ‘HALF MARATHON” அரை மரதன் போட்டி- உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு..!

அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள பொத்துவில்  அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.

அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  (01)  மாலை  அறுகம்பே Paddyway உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்தி பெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் ‘HALF MARATHON” போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்தி வருகின்றோம். இம்முறை 6வது தடவையாகவும் குறித்த மரதன் ஓட்டப்போட்டியினை மிகவும் சிறப்பாக நடாத்தவுள்ளோம். அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்துக் காணப்படுகிறது. இக்காலகட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் பொருட்டு இம் மரதன் ஓட்டப் போட்டியை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை செய்துள்ளோம்.

இப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 250பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் 150 உள்நாட்டு வீரர்களும் 100 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பிரதேச மரதன் ஓட்ட வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த  போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்,  சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம்.

இந்த மரதன் போட்டியானது 21.1 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 21.1 கிலோ மீட்டர் பிரிவில் 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 கிலோ மீட்டர் பிரிவில் 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் 5 கிலோ மீட்டர் பிரிவில் 12- 17 வயதுடைய சிறுவர்களும் பங்குபற்ற முடியும்.

இந்த ஊடக சந்திப்பில் போரத்தின் பிரதி தலைவர் எம்.எஸ்.அப்துல் நாசர், பொதுச்செயலாளர் எம்.எச்.சுபுஹான் உள்ளிட்ட போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்,
 


(ஏ.எல்.எம்.ஷினாஸ், றியாஸ் ஆதம், பாறுக் ஷிஹான், சியாத் எம். இஸ்மாயில்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *