வெண்டர்ஸேயின் சுழலில் சிக்கியது இந்தியா. இலகு வெற்றியுடன் தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 2ஆவது போட்டியில் ஜெப்ரி வெண்டர்ஸி சுழலில் இந்திய வீரர்களை அள்ளிச் சுருட்ட 32 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணி போட்டியை சமநிலை செய்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் (4) தீர்மானமிக்க 2ஆவது போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி மாற்றமின்றிக் களம் காண, இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.
வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிக் கொள்ள , அவருக்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்ஸியும், முஹம்மட் ணிராஸிற்கு பதிலாக கமிந்து மெண்டிசும் களம் கண்டனர். அதற்கமைய போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய களம் நுழைந்த ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க சிராஜின் முதல் பந்திலே டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார்.
இருப்பினும் மற்றைய ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்ணான்டோ 40 ஓட்டங்களையும், பின்வரிசை வீரரான கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 30 ஓட்டங்களையும் சேர்த்துக் கொடுக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனால் இலங்கை அணி நிர்ணயித்த 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இந்திய அணிக்கு ஆரம்ப ஜோடியான ரோஹித் மற்றும் கில் ஜோடி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ஆறு மற்றும் நான்கு ஓட்டங்களை விளாசி மிரட்டிய ரோஹித் அரைச்சதம் கடக்க இந்திய அணி 97 ஓட்டங்களை பெற்றிருக்க முதல் விக்கெட்டாக ரோஹித் 64 ஓட்டங்களுடன் வெண்டர்ஸியின் சுழலில் சிக்கினார்.
பின்னர் 35 ஓட்டங்களுடன் களத்திலிருந்த கில்லை வெண்டர்ஸி பெவிலியன் அனுப்பியதுடன் , சிவம் துபேயை ஓட்டமின்றி ஆட்டமிழக்கச் செய்து மிரட்டினார். அடுத்த ஓவரில் 14 ஓட்டங்களை பெற்றிருந்த கோஹ்லியை ஆட்டமிழக்கச் செய்ததுடன், மத்திய வரிசை வீரரான ஸ்ரேயஸ் ஐயரையும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்த வெண்டர்ஸே ஒருநாள் அரங்கில் முதல் 5 விக்கெட் பிரதியை பெற்று அசத்தினார்.
அதனால் விக்கெட் இழப்பின்றி 97 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி 133 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது. பின்னர் ராகுலும் வந்த வேகத்தில் வெண்டர்ஸியின் சுழலில் போல்ட் ஆக இலங்கை அணி வெற்றியை நெருங்கியது. இருப்பினும் ஒருபுறத்தில் அக்ஷர் படேல் நிலைத்து ஓட்டங்களை சேர்க்க மறுபுறத்தில் 15 ஓட்டங்களுடன் வாசிங்டன் சுந்தர் அசலங்கவின் சுழலில் சரணடைந்தார். நம்பிக்கை கொடுத்த அக்ஷர் படேல் 44 ஓட்டங்களுடன் அசலங்கவின் சுழலில் அவரிடமே பிடிகொடுத்து பெவிலியன் திரும்ப இலங்கையின் வெற்றி உறுதியானது.
பின்வரிசையில் வந்த சிராஜ் 4 ஓட்டங்களுடன் அசலங்கவினால் ஆட்டமிழப்புச் செய்யப்பட , இறுதி விக்கெட்டாக அர்தீப் சிங் 3 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆக இந்திய அணியால் 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் இலங்கை அணி 32 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்று தொடரில் 1 போட்டி மீதமிருக்க 1:0 என முன்னிலை பெற்றது. போட்டியின் நாயகனாக 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டிய ஜெப்ரி வெண்டர்ஸே தெரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)