Uncategorized

நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின் முதலாவது இடம் கல்விக்கே வழங்கப்படுகிறது – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

ஆசிரியர் சேவை சங்கத்தின் மிகப் பிரமாண்டமான தேசிய ஆசிரியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஓரிடத்திற்கு கொண்டுவர பலர் உழைத்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இப்பொழுது எமது நாட்டில் ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு கோரப்படுகின்ற தினமும் தோ்தல் நடத்தப்படுகின்ற தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிபற்றிய கடுகளவேனும் சந்தேகமும் ஐயப்பாடும் இருந்திருப்பினும் இந்த பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள ஆசிரியர்களை கண்டதும் அந்த சந்தேகம், ஐயப்பாடு மறைந்துபோயிருக்கும். இந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்றுசோ்ந்து வெளிக்காட்டுவது செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் உறுதியான வெற்றியையேயாகும்.

எமது நாடு பாரிய கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளதை நாம் அறிவோம். இந்த சீர்குலைவு எல்லா துறைகளையும் ஊடறுத்துச் செல்கின்றது. கல்வி, சுகாதாரம், சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகிய எல்லா துறைகளிலும் சீர்குலைந்த ஒரு நாடே இருக்கிறது. ஆகவே சீர்குலைந்த, சீரழிந்த எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான, எதிர்காலம் இழக்கச் செய்விக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளின் மற்றும் வாழ்க்கையே இல்லாத நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ள எமது பிரஜைகளின் வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கான ஒரு பாரிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. அந்த சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாம் இந்த அரசியல் அதிகாரத்தை மாற்றியமைத்தாக வேண்டும்.

76 வருடங்கள் பழமையான, தோல்விகண்ட, அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையிலிருந்து நாம் விலகிச் செல்லவேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவற்கும் முன்னேற்றுவதற்குமான ஆரம்பப் புள்ளி அதுதான். நாங்கள் பல விடயங்களைப் பற்றி பேசலாம். தோன்றியுள்ள நிலைமைகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அவை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம். ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றி விரக்தியடைந்திருக்கலாம்.ஆனால் எந்த இடத்திலிருந்தாலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பற்றி ஒரு முடிவினை நாங்கள் எடுப்பதானால் அதனை சாதிக்க முடிவது பொதுமக்களின் இயக்கமொன்றின் கைகளுக்கு அதாவது, தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்வதன் மூலமாக மாத்திரமே ஆகும்.

இந்த அதிகாரத்தை பரிமாற்றிக் கொள்ளாமல், இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், இந்த பழைய தோல்விகண்ட அரசியல் அதிகாரத்துவத்தை விரட்டியடிக்காமல் எங்களுடைய நாட்டை இம்மியளவும் முன்னோக்கி நகர்த்த முடியாது. எனவே நாங்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்கான தொடக்கத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும். எனவே, பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருந்தகைள் அந்த வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று தீவிரமாக நம்புகிறேன்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பிரதானமான செயற்பொறுப்பு கல்விக்கே இருக்கிறது. அண்மைக்காலமாக முன்னேற்றமடைந்த நாடுகளை நாங்கள் எடுத்துப்பார்த்தால் அத்தகைய ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாடுகளை முன்னேற்றுவதற்கான பிரதான பங்கினை வகித்தது கல்வியாகும். உங்களுக்கு ஞாபகமிருக்கும், இலவசக் கல்விச் சட்டம் அங்கீகரிக்கப்படுகையில் கன்னங்கர அவர்கள் விடுத்த ஒரு கூற்று இருக்கிறது.

செங்கல்லினால் கட்டப்பட்டிருந்த உரோமாபுரியை பளிங்குக் கற்களால் முழுநிறைவு செய்ததாக ஒகஸ்டஸ் பேரரசன் பெருமித்துடன் கூறினார். அதிக விலைக்கு இருந்த கல்வியின் விலையை குறைப்பதாகவும் மூடப்பட்ட புத்தகமாக எங்களுக்கு தென்பட்ட கல்வியே திறந்த ஆவணமாக மாற்றியதாகவும் தனவந்தர்களுக்கு மாத்திரம் மரபுரிமையாக இருந்த கல்வியை பாமரர்களின் மரபுரிமையாக மாற்றியதாகவும் பெருமிதத்துடன் கூற அரசுக் கழகத்திற்கு இயலுமானதென்றால், அந்த சுயவர்ணிப்பு ஒகஸ்டஸ் பேரரசனின் வர்ணிப்பை விட எவ்வளவு மேலானது.

அதாவது வரம்புகள் விதிக்கப்பட்டிருந்த கல்வியை மூடப்பட்டிருந்த புத்தகத்தை ஒரு சமூகக்குழுவிற்கு மாத்திரம் கல்விக்கான கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் அந்த புத்தகத்தை பிரித்து புரட்டி பாமர்களுக்கு கல்விக்கு அவசியமான கதவுகளை திறந்து விடமுடியுமானால் அது உரோமாபுரியை பளிங்கு கற்களால் முழுநிறைவு செய்ததாகக் கூறப்படுகின்ற உன்னதமான கதையைவிட தலைசிறந்ததாக அமையும். அதன் அர்த்தம் என்ன? இந்த நாட்டை கல்வியின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதல்லவா?

சிங்கப்பூர் பிரதமர் ஒரு கட்டத்தில் கூறினார், சிங்கப்பூர் கொண்டுள்ள ஒரே வளம் மனித வளம் மாத்திரமே என்று. அந்த மனித வளத்தை முன்னேற்றாமல் சிங்கப்பூருக்கு எதிர்காலம் கிடையாதென அவர் கூறுகிறார். சிங்கப்பூரின் ஊழியர் படையின் 41 வீதம் பட்டதாரிகளாவர். ஊழியர் படையின் 21 சதவீதமானோர் தொழில்சார் டிப்ளோமா தாரிகளாவர். ஊழியர் படையின் 63 வீதமானவர்கள் ஒன்றில் பட்டதாரிகள் அல்லது டிப்ளோமாதாரிகள். இலங்கையின் உழைப்புப்படையின் 15 சதவீதத்தினரே அந்த தகைமையைக் கொண்டிருந்தார்கள்.

எனவே எமது நாட்டின் எதிர்காலம் எந்தளவு முன்னேற்றகரமான மனித வளத்தை கொண்டுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலே பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 99 ஆயிரத்திற்கு கிட்டிய எண்ணிக்கையுடையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். இதில் 83 வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தர வகுப்பை விட குறைந்த தரத்தை சோ்ந்தவர்கள். 64 வீதமானவர்கள் எட்டாம் வகுப்பிற்கு குறைவானவர்கள். கல்விக்கும் குற்றச் செயலுக்கும் இடையிலான தொடர்புதான் அதன் மூலமாக வெளிக்காட்டப்படுகிறது.

கல்வியறிவு இல்லாவிட்டால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான போக்கு அதிகமானதாகும். அதனால் தான் குற்றச் செயல் புரிபவர்களில் 83 வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தர வகுப்பை விட குறைந்தவர்கள். எமது நாட்டில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களில் நூற்றுக்கு 74 வீதமானவர்கள் எட்டாம் வகுப்பிற்கு குறைந்தவர்கள். எனவே போதைப்பொருளுக்கும் கல்விக்குமிடையில் ஒரு தொடர்பு நிலவுகின்றது. எமது நாட்டில் வறுமைக்கோட்டினை கீறினால் அதுவும் கல்வி அறிவின்மையும் ஒரே சீராக பயணிக்கிறது.

வறியவர் என்றால் கல்வியறிவற்றவர்கள். கல்வியறிவு இல்லையேல் வறியவர்கள். எனவே இந்த வறுமை நிலைபற்றிய பிரச்சினையின்போது நாங்கள் கிராமிய வறுமை நிலையிலிருந்து மீட்பு பெறுவதானால் அதற்கான பாதை கல்வியூடாகவே வரையப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை குறைப்பதற்கான பாதையும் அவ்வாறே. சட்டத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவதற்கான பாதையும் அவ்வாறே. போதைப்பொருளற்ற நாடும் கல்வி மூலமாகவே. செல்வந்த நாடும் கல்வி மூலமாகவே. எனவே எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கியமான கருவி கல்வியென நாங்கள் நினைக்கிறோம். எனவே நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின் முதலாவது இடம் கல்விக்கே வழங்கப்படுகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் கல்வியினூடாக பல பொருளாதார அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அயல் நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் கல்வியிலேயே கருத்தினை செலுத்தியிருக்கிறார்கள். கடந்த வருடத்தில் IT துறையில் அறிவின் பங்கு மிகவும் உயர்வானது. ஒரு சங்கிலியை எடுத்துக் கொண்டால் சங்கிலியை உருவாக்குகின்ற பங்கினைவிட தங்கத்தின் பங்கு அதிகமாகும். இந்தியா கடந்த வருடத்தில் IT தொழிற்துறையின் பங்கு 253 பில்லியனாகும். 253 பில்லியன் டொலர் பங்கினை அந்தப் பொருளாதாரம் வகிக்கிறது.

அதில் இந்தியா 199 பில்லியனை IT தொழிற்துறையை ஏற்றுமதி செய்வதன் மூலமாகவே பெற்றுக்கொள்கிறது. அதாவது IT தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வெளியில் விற்று 199 பில்லியன் டொலர்களை வருமானமாக பெறுகிறது. சிங்கப்பூரில் IT தொழில்துறையின் வருமானம் 47 பில்லியன் டொலராகும். தென்கொரியாவின் ICT தொழிற்றுறை ஏற்றுமதி வருமானம் 233 பில்லியன் டொலராகும். எங்களுடைய ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமே 12 பில்லியன் டொலர்களாகும். எனவே சீரழிந்துள்ள இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரே வழிவகை கல்விதான். எங்களுடைய முன்னேற்றப்பாதையின் சுக்கான் கல்விதான். வேறு வழியில்லை. எங்களிடம் எண்ணெய் வளம் கிடையாது. தங்க வயல்கள் கிடையாது.

கேஸ் படிவுகள் கிடையாது. செம்புப்படிவுகள் கிடையாது. நிலக்கரிப்படிவுகள் கிடையாது. துத்தநாகம் நிறைந்த நாடு அல்ல. வணிக வளங்கள் நிறைந்தவொரு நாடல்ல. எனவே எமது நாட்டின் பிரதான வளம் மனித வளமாகும். எமது கல்விக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. மஹிந்த தேரரின் வருகையுடன் எங்களுக்கு ஒழுங்கமைந்த ஒரு கல்வி கிடைக்கின்றது. எனவே எமது நாட்டின் பொருளாதார சீரழிவையும் மலிந்துபோயுள்ள குற்றச் செயல்களையும் சமூக நெருக்கடியையும் கல்வி மூலமாகவே தீர்த்து வைக்க முடியும்.

ஆப்பிள் கம்பனி உற்பத்தி செய்கின்ற ஐபோனுக்கு, அதன் டிஸ்பிளேவுக்கு, அதன் பெட்டரிக்கு பொதுவாக அதன் மொத்த பெறுமதியில் 33 வீதம் தான் இருக்கிறது. அதாவது, அதன் ஆக்கக்கூறுகளின் பெறுமதி 33 வீதமாகும். உற்பத்தி மற்றும் ஒன்று சோ்ப்பவர்களின் பங்கு 2.3 வீதமாகும். விநியோகம் மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு 3.2 வீதம் ஆப்பிள் கம்பனியின் இலாபம் நூற்றுக்கு 54 வீதமாகும். அதாவது மிக அதிகமான பங்கு அதனை நிர்மாணிப்பவர்களுக்கு அதாவது அறிவுக்கே கிடைக்கிறது. உலகம் அந்த இடத்தில் தான் இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம் ஊபர் (Uber) ஆகும். ஆனால் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட கிடையாது. ஆனால் உலகில் இலட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. ஓடுகின்ற ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் 25 வீதம் ஊபர் கம்பெனிக்கு கிடைக்கிறது. எதற்காக ஒரே ஒரு மென்பொருள் முறைமைக்காகும். இந்த மென்பொருள் முறைமைதான் அவர்களுக்கு அந்த செல்வத்தை திரட்டித்தருகிறது. எனவே உலகின் முன்னேற்றம் புதிய அறிவின் சொந்தக்காரர்களை சென்றடைகிறது. அவர்கள் தான் எதிர்கால உலகம்.

நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமான கப்பற் பலத்தை கொண்டவன் தான் உலகில் ஆதிக்கம் செலுத்தினான். அடுத்த யுகத்தில் மிக அதிகமான பீரங்கி பலத்தை கொண்டவன் உலகத்தை ஆதிக்கம் செலுத்தினான். அதன் பிறகு மிக அதிகமாக பண பலம் படைத்தவன் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தினான். ஐக்கிய அமெரிக்காவின் வோல் ஸ்றீட் தான் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. மிக அதிகமான நிதிப்பலம் அங்குத்தான் இருந்தது.

ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உலகில் ஆதிக்கம் செலுத்தப்போவது அதிக தொழில்நுட்ப அறிவுப்படைத்தவர்கள் தான். எனவே இந்த பாரம்பரிய பொருளாதாரத்திலிருந்து மீட்பு பெறவேண்டுமானால் அதற்கான ஒரே வழி கல்விதான். எனவே நான் உங்களுக்கு வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முதன்மைத்தானமும் முக்கிய இடமும் கல்விக்குத்தான் வழங்கப்படும். கல்வி என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எமது நாட்டில் நூற்றுக்கு 68 வீதமான குடும்பங்களுக்கு முறையான உணவு கிடையாது. ஒரு சிலர் கூறுகிறார்கள் கல்வியை சந்தைப்படுத்த வேண்டுமென்று. நாங்கள் அதற்கு முற்றிலுமே எதிரானவர்கள். அறிவு என்பது ஒரு வர்த்தகப் பண்டமல்ல. கல்வி இலாபம் ஈட்டுகின்ற ஒரு வழிமுறையல்ல. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் ஒரு நியாயமான சமூகமல்ல. எனவே தேசிய மக்கள் சக்தி அரச கல்வியை மென்மேலும் பலப்படுத்தும். இலவச கல்வியை மென்மேலும் பலப்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்கள் பணம் செலுத்தி கற்கவேண்டுமென்று நினைத்தால் அவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒழுங்குறுத்தப்படுகின்ற கல்வி நிலையங்களில் கல்வி கற்கலாம்.

புதிய அறிவு தேவை என விரும்பினால் இப்போது புதிய அறிவு பிறப்பிக்கப்படுகின்ற மேற்குலக நாடுகளுக்குச் சென்று அந்த கல்வியை பெற்றுக்கொள்ளலாம். அதனை நாங்கள் எதிர்க்கமாட்டோம். எனவே எமது கல்வி மூன்று விதமானதாக அமையும். ஒன்று அரசாங்க கல்வி, இரண்டாவது அரசாங்கத்தினால் ஒழுங்குறுத்தப்படுகின்ற தனியார் கல்வி, மூன்றாவது வெளிநாட்டுக் கல்வி. ஆனால் கல்விக்கான அடிப்படை பொறுப்பினை அரசாங்கம் வகிக்க வேண்டும். 2023 இல் எத்தியோப்பியா மொத்த தேசிய உற்பத்தியில் 3.7 ஐ கல்விக்காக ஒதுக்குகிறது. கென்னியா 4.6 சதவீதம். கிர்கிஸ்தான் 6.21 சதவீதம். இலங்கை 1.2 சதவீதம். அதாவது எத்தியோப்பியாவை விட குறைந்த சதவீதமே எமது நாட்டின் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே எங்களுடைய முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே கல்விக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

2017 இல் இலங்கையிலிருந்து மூன்று இலட்சத்து மூவாயிரம் போ் வெளிநாட்டுத் தொழில்களுக்காக சென்றிருக்கிறார்கள். இதில் இரண்டு இலட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் போ் பயிற்றப்பட்ட, பகுதியளவில் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத உழைப்பாளிகளாகவே சென்றிருக்கிறார்கள். 6000 போ் தான் உயர் தொழில்களுக்கு சென்றிருக்கிறார்கள். எனவே உலகில் பண்டங்கள் சந்தையையும் நாங்கள் கைப்பற்றவில்லை. முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையையும் நாங்கள் கைப்பற்றவில்லை. உணவு சமைக்கவும் பிள்ளைகளை பராமரிக்கவும் வாகனங்களை ஓட்டுவதற்காகவுமே நாங்கள் செய்கிறோம்.

எமது நாட்டின் கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பு அவசியமாகின்றது. எமது நாட்டிலே 10,000 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் இருக்கின்றன. இதில் அன்னளவாக 5400 பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவாகவே இருக்கிறார்கள். 1423 பாடசாலைகளில் 50 பிள்ளைகளை விட குறைந்தவர்களே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாடசாலையை நாங்கள் எப்படி பாடசாலை என்று கூறுவது? ஒரு பேச்சுப்போட்டியை நடத்த முடியுமா? இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்த முடியுமா? அண்மையில் நான் வியலுவிற்குச் சென்றேன்.

பாடசாலையில் 19 மாணவர்கள். 5 ஆசிரியர்கள். எனவே இந்த பாடசாலை முறைமையின் சீரழிவினையும் அதிகமாக கவனத்தில் கொள்கிறோம். ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லக்கூடிய உச்ச அளவிலான தூரம் 4 கிலோ மீற்றராகும். அதனால் எங்களுடைய பாடசாலை முறைமையை மீள் இடஅமைவு செய்விக்க வேண்டும். மனித வளமும் விரயமாகிறது. பௌதீக வளமும் விரயமாகிறது. இது ஒரு அர்த்தமற்ற கல்வியாகும். எனவே நாங்கள் இந்த பாடசாலை முறைமையையும் ஒழுங்குறுத்த வேண்டும்.

பாடசாலையில் சோ்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு 9 வீதமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பிற்கு முன்னதாகவே பாடசாலையை விட்டு விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு வருடத்திலும் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 30,000 ஆக அமைகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 10 ஆம் வகுப்பிற்கு முன்னர் எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையிலிருந்து விலகிச் செல்ல இடமளிக்கமாட்டாது.

எமது நாட்டின் கல்வி ஒரு எளிய நோ்கோட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கிறது. ஆண்டு 5 இல் புலமைப்பரிசில். அதன் பின்னர் க.பொ.த. சாதாரண தர பரீட்சை. அதன் பின்னர் உயர்தர கணிதம், விஞ்ஞானம். எந்த பிள்ளையிடமும் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டாள் மருத்துவர் அல்லது பொறியியலாளர் என்று தான் கூறுவார்கள். சமூகத்திற்கு எல்லா விதமான தொழில்களும் அவசியம். சிகை அலங்காரம் செய்பவர் தேவை. இலக்ரிஷியன் தேவை. தொழில்நுட்ப உத்தியோகத்தர் தேவை.

சாரதி தேவை. இல்லாவிட்டால் சமூகம் நிலவமாட்டாது. எனவே கல்வி என்பது ஒரு நோ்கோட்டு பாதையில் அமைந்துவிட கூடாது. எங்களுடைய ஒவ்வொரு பெற்றோரினதும் ஒவ்வொரு பிள்ளையினதும் எதிர்பார்ப்பு ஆரம்பப் பட்டப்படிப்பாகும். எனினும் உலகிலே ஆரம்ப பட்டமென்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். ஆனால் இன்றைய உலகத்திலே அதற்கு அப்பால் சென்ற பட்டப்பின்படிப்பு அவசியமாகிறது. கோட்பாட்டினை நடைமுறையில் பிரயோகித்துப் பார்க்க பட்டப்பின்படிப்பு அவசியமாகிறது. வெளிநாடுகள் பெரும்பளவில் பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் மீதே கவனம் செலுத்தி வருகிறது.

எனவே நாங்கள் கல்வியில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரவேண்டும். எனவே இலங்கையில் முழுநேர பட்டப்பின் படிப்பு நிறுவனத்தை உருவாக்குவோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் திட்டமாகும். எனவே இந்த உற்பத்தியின் தரத்தை தீர்மானிக்கின்றவர்கள் ஆசிரியர்களாகிய நீங்களே. உங்களுக்கும் பொருளாதாரக் கடப்பாடுகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யக்கூடிய தொழிலாக ஆசிரியர் தொழிலை மாற்றுவோம். எனவே தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அதிக அக்கறையுடன் செயலாற்றும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாடசாலை பிள்ளைகளை எந்தவொரு அரசாங்கம் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கமாட்டாது. CTB அரசியல், CEB அரசியல், துறைமுகம் அரசியல், நீர்வளச்சபை அரசியல், எல்லாமே அரசியல்.

குறைந்தபட்சம் பாடசாலையையாவது அரசியலிலிருந்து பிழைக்கவைக்க வேண்டும். ஆசிரியர்களின் இடமாற்றம், பதவியுயர்வு, ஏனைய வாய்ப்புகளை வழங்குதலை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க செய்ய மாட்டோம். கடந்த காலத்தில் மாகாண சபைகளில் முதலமைச்சரின் விருப்பு வெறுப்புக்கு இணங்கவே இவை எல்லாமே நடைபெற்றது. எனவே இந்த கலாச்சாரத்தை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்கள் கையில் தான் தங்கியிருக்கிறது. எனவே நாங்கள் கல்வியையும் உங்கள் தொழிலையும் உங்கள் தொழில் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *