விளையாட்டு

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை; இன்று இந்தியாவுடன் முதல் ஒருநாள் போட்டி

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரப் போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான வெள்ளைப் பந்துத் தொடர்களில் முதலில் நிறைவுக்கு வந்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இலங்கை அணியின் மிக மோசமாக மத்திய மற்றும் பின்வரிசைத் துடுப்பாட்டத்தினால் தொடரை 3:0 என இந்திய அணி வெள்ளையடித்துக் கைப்பற்றியிருந்தது. அதிலும் குறிப்பாக 3ஆதும், இறுதியுமான போட்டியில் வெற்றிக்கு 30 பந்துகளில் 9 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 28 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையிலிருந்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதுடன் சுப்பர் ஓவரில் 2 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுக்களை இழக்க இந்திய அணி 1 பந்தில் போட்டியை நிறை செய்திருத்தமை இலங்கை ரசிகர்களை கோபத்தில் தள்ளியிருந்தது.

இலங்கையின் நிலை இவ்வாறிருக்க இன்றைய தினம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியைக் காண இலங்கை ரசிகர்களின் வரவு மந்தமாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. இத் தொடருக்காக ஏற்கனவே இலங்கை அணி சரித் அசலங்க தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்க நேற்று முன்தினம் காயம் காரணமாக வேவகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன தொடரிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளரும், கழக மட்டப் போட்டிகளில் 45 போட்டிகள் விளையாடி 80 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்திவரும் முஹம்மட் ஷிராஸ் இலங்கை ஒருநாள் அணிக்கு முதல் முறையாக உள்வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் மேற்றைய தினம் மற்றுமொரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்கவும் உபாதையால் குழாத்திலிருந்து வெளியேற அவருக்கு பதிலாக இளம் வீரரான இஷான் மாலிங்க அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவ்விரு புதுமுக வீரர்களில் ஒருவவருக்கு இன்றைய போட்டியில் சர்தேச அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இலங்கை அணியைப் பொறுத்த மட்டில் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரையுமே நம்பலாம். பந்துவீச்சில் மகேஷ் தீக்சன இலங்கை அணியை தூக்கி நிறுத்தூர் என எதிர்பார்க்கலாம். மாறாக இந்திய அணியைப் பொறுத்தவரையில் துடுப்பாட்டத்தில் ரோஹித், கோஹ்லி, ராகுல், கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என அடிக்கிக் கொண்டே போகலாம். அதேபோல் பந்துவீச்சிலி முஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இரு கேப்பந்து வீச்சாளர்களும் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதுரையில் இவ்விரு அணிகளும் 168 ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்க அதில் இந்திய அணி 99 வெற்றிகளையும் , இலங்கை அணி 57 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன் 1 போட்டி சமநிலை பெற்றிருக்க 11 போட்டிகள் முடிவின்றி நிறைவு பெற்றுள்ளன. மேலும் இவ்விரு அணிகளும் இறுதியாக ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்றிருந்தது.

இப்போட்டி மும்பை வெங்கடே மைதானத்தில் இடம்பெற்றிருக்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதற்கு பதிலளித்த இலங்கை அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 302 ஓட்டங்களால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *