“தீவிரவாதம் பயங்கரவாதத்தை ஒழித்து சகிப்புத்தன்மை, சகவாழ்வை நிலைநாட்டிட மக்காவில் சர்வதேச மாநாடு”
“உலகில் எந்த நாடாக இருந்தாலும் தங்களது நாடுகளில் பயங்கவாதம் தீவிரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தங்கள் நாட்டுப் பிரஜைகளை வாழ வைத்திடவும் சுபீட்சம் மிக்க அமையான ஆட்சியை நடாத்த வேண்டும் என விரும்பினால் அதற்கான முன்மாதிரியாக சவுதி அரேபியாவை கொள்ளலாம். அதற்கான சிறந்த முன்மாதிரிமிக்க தலைவர்களாக சவுதி ஆட்சியாளர்களை எடுத்துக் கொள்ளலாம். அப்போது தங்களது நாடுகள் சுபீட்சம் அடையும். நாட்டுப் பிரஜைகளும் சுபீட்சமான நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்”.
இன்றைய நவீன உலகில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் மனித சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் விளங்குகிறது. இது உலகின் பல மட்டத்தினரதும் அவதானித்தைப் பெற்றதாக உள்ளது. அதனால் இச்சவாலை முறியடித்திடுவதிலும் சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதிலும் உலகளாவிய ரீதியில் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கான நடவடிக்கைகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிராக அன்று தொட்டு இன்று வரை மிகக் கடுமையாக உழைத்து வரும் நாடாக சவுதி அரேபியா விளங்குகிறது. அதன் பயனாக மனித சமூகத்திற்கு எதிரான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனைத்து வழிகளிலும் கட்டுப்படுத்தி ஒழித்த நாடாகத் திகழுகிறது சவுதி அரேபியா.
என்றாலும் உலகில் ஏனைய நாடுகளையும் பிராந்தியங்களையும் போன்று சவுதியிலும் அவ்வப்போது சிறு சிறு தீவிரவாத குழுக்கள் உருவான போதிலும் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்த தேசமாகவும் சவுதி விளங்குகிறது. தீவிரவாத செயற்பாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆயுள் தண்டனை, மரண தண்டனை என கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதன் பிரதிபலனாக தீவிரவாத, பயங்கரவாத வன்முறைகள் அற்ற தேசமாக விளங்கும் சவுதி, சகிப்புத்தன்மையும் சகவாழ்வும் தலைத் தோங்கிய நாடாகவும் திகழுகிறது. அத்தோடு அமைதி நிறைந்த பூமியாகவும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது சவுதி.
சவுதி அரேபியாவின் சகல ஆட்சியாளர்களும் தீவிரவாத்தை ஒழித்து சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் நிலை நாட்டுவதற்காக ஆரம்ப காலம் முதல் முழு மூச்சாகச் செயற்பட்டுள்ளனர். அந்த வகையில் இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத், பட்டத்து இளவரசரான பிரதமர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆல் ஷைக் ஆகியோர் தீவிரவாதம் மீளெழ முடியாதபடி கட்டுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மை சகவாழ்வை மென்மேலும் வலுவுடன் கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்து வருகின்றனர். இதன் நிமித்தம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் தீவிரவாதத்தை ஒழித்து சகிப்புத்தன்மை சகவாழ்வை நிலைநாட்டிடவும் அதனைத் தொடர்ந்தும் பேணிடவும் என விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக சர்வதேச ரீதியிலும் பிராந்திய மட்டத்திலும் மாத்திரமல்லாமல் உள்நாட்டிலும் வருடாவருடம் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் சவுதி நடாத்தி வருகின்றது. இதன் பயனாக தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்ட வண்ணமுள்ளது.
இப்பின்புலத்தில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் விஷேட வேண்டுகோளுக்கு அமைய நாளை 03 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை தீவிரவாத்தை ஒழித்து சகிப்புத்தன்மை சகவாழ்வை நிலைநாட்டுவதற்கான மூன்று நாட்கள் சர்வதேச மாநாடு மக்காவில் நடாத்தப்படுகிறது. இம்மாநாட்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளது இஸ்லாமிய விவகார அமைச்சர்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், துறைசார் புத்திஜீவிகள், கல்விமான்கள், முப்திகள், உலமாக்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டின் நிமித்தம் மக்கா அல்-முகர்ரமா விழாக்கோலம் பூண்டுள்ளது. இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சர் அப்துல் லதீப் ஆல் ஷைக் ஆகியோரின் வர்ணப் படங்களைத் தாங்கிய பெனர்கள் பிரதான வீதிகளிலும் கட்டிடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் அப்துல் லதீப் ஆல் ஷெய்க்கின் நேரடி கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, “தீவிரவாதம், பயங்கரவாதம், மதவெறி, வெறுப்புப் பேச்சு மற்றும் தீவிரவாதத்தின் ஆபத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது?, இஸ்லாமோஃபோபியாவை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? சகிப்புத்தன்மை சகவாழ்வை சமூகங்களுக்கு மத்தியில் எவ்வாறு நிலைநாட்டுவது” ஆகிய தலைப்புக்களில் 10 அமர்வுகளாக நடைபெறுகிறது.
இம்மாநாட்டின் ஊடாக அன்று தொட்டு இன்று வரை தீவிரவாதத்தை ஒழித்து சகிப்புத்தன்மை சகவாழ்வை கட்டியெழுப்பவென சவுதி அரும்பாடுபட்டு உழைத்து வருவதை உலகிற்கு தெளிவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்தோடு இஸ்லாமிய உலகில் மத விவகார தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் மிதமான உறவுகளை வலுப்படுத்துவதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சுக்கும் உலகின் பல்வேறு மத நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்கான வழிகளைப் பகிர்ந்து கொள்ளவும், இஸ்லாத்தை தெளிவாக எடுத்தியம்பிடவும், பயங்கவாதம், வெறுப்பு பேச்சு போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தத்தமது நாடுகளில் வாழ ஏற்பாடுகள் செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தத்தம் நாடுகளில் பள்ளிவாசல்களை எவ்வாறு அமைக்க வேண்டும், அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும், பள்ளிவாசல்களுக்கு நியமிக்கப்படும் இமாம்கள் எவ்வாறான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும், அவர்களது பிரசாரங்களில் வெறுப்புத்தன்மை நிந்தனைகள் இல்லாமல் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் தகுந்த அறிவு அல்லது நிபுணத்துவம் இல்லாமல் நடுநிலை பேனாமல் மார்க்கத் தீர்ப்புகள் (பத்வா) வழங்கும் விடயத்தில் உள்ள ஆபத்துகள் போன்ற விடயங்களை ஆராயவும், இவ்விடயங்கள் குறித்து சவுதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சிடமுள்ள அனுபவங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதும் இம்மாநாட்டின் நோக்கமாக உள்ளது.
மேலும் முஸ்லிம் நாடுகள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்துதல், இஸ்லாமிய மத விவகாரங்களில் பரஸ்பர ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல், மார்க்க விடயங்களை அல் குர்ஆன் மற்றும் ஸுன்னா அடிப்படையிலும் மாரக்கத்ததை நன்கு விளங்கிய ஸலபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கங்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளல், மேலும் தத்தமது நாடுகளில் உள்ள பள்ளிவாசல்களின் புனிதத்துவங்களைப் பாதுகாத்தல், வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் மையங்களுடனான உறவுகளை வலுப்படுத்துதல், இஸ்லாமியப் பணிகள் தொடர்பான தகவல்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளல் போன்றவையும் இம்மாநாட்டின் ஊடாக இடம்பெறுகின்றன.
அத்தோடு இம்மாநாட்டின் நிமித்தம் வருகைதரும் இஸ்லாமிய விவகார அமைச்சர்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், புத்திஜீவிகள், முப்திகள், உலமாக்கள் ஆகியோருக்கு அவர்களது சேவைகளைப் பாராட்டி கௌரவிப்பதும் அவர்கள் இலவசமாக உம்ரா செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பரந்துபட்ட நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் உள்ளடக்கிய இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள சவுதி அரேபியாவானது, உலக முஸ்லிம்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்துமாகும். கஃபதுல்லாஹ்வும் மஸ்ஜிதுன் நபவியும் அமைந்துள்ள பூமி இது. அவற்றை ஆல் ஸஊத் பரம்பரையினர் சிறப்பாகப் பராமரித்து நிர்வகித்து வருதோடு யாத்திரிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாகச் செய்து கொடுத்து வருகின்றனர்.
அதேநேரம் உலக முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் வழங்கி அவர்களின் அனைத்து விடயங்களிலும் மிக அக்கறையோடு செயற்பட்டு வரும் சவுதி, முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்துவதும் தம் பொறுப்பு என்பதை நன்குணர்ந்துள்ளது. அதனால் தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், சகிப்புத்தன்மை சகவாழ்வை நிலைநாட்டிடவும் அதைப் பற்றிய தெளிவுகளை முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு செல்லவும் சவுதி தொடர்ந்தும் உழைத்து வருகின்றது. இப்பின்னணியில் தான் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்களை சவுதிக்கு அழைத்து சர்வதேச மாநாடுகளை அடிக்கடி நடாத்தி வருகிறது. இவ்வாறான மாநாடுகளை உலகின் ஏனைய நாடுகளிலும் ஏற்பாடு செய்து நடாத்தவும் சவுதி தவறுவதில்லை.
அந்த வகையில் கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் மொரோக்கோ, இந்தியா, பங்களாதேசம், நேபாளம், மாலைத்தீவு, இந்தோனேசியா தாய்லாந்து, வடக்கு மக்டோனியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறான மாநாடுகள் நடாத்தப்பட்டுள்ளன.
சவுதி அரசு எப்போதுமே தனித்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் விவகாரங்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களுடனான சகிப்புத்தன்மை, சகவாழ்வு விடயங்களிலும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகிறது. அன்று தொட்டு இன்று வரை பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மாற்று மதத்தவர்களுடன் உறவுகளோடும் சகவாழ்வோடும் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இஸ்லாம், இஸ்லாம் அல்லாத தலைவர்களுடனும் உலகில் உள்ள உலமாக்கள், முப்திகள் புத்திஜீவிகளுடன் சேர்ந்தும் சவுதி தொடர்ந்தும் உழைத்து வருகின்றது.
அந்தடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான மாநாடொன்று கொழும்பில் சவுதியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவென இந்நாட்டு புலனாய்வுத் துறைக்கும் சவுதி பாரிய ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு சேவை செய்யவும் தீவிரவாத கருத்துக்களையும் செயற்பாடுளையும் எதிர்த்தும் இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதிலும் மக்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வின் விழுமியங்களை மேம்படுத்துவதிலும் சவுதி அளப்பரிய பங்களிப்பை நல்குவது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் அப்துல் லதீப் ஆல் ஷைக், இஸ்லாமிய விவகார அமைச்சைப் பொறுப்பெடுத்ததில் இருந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வைப் பரப்புவதற்கும் எடுத்துவரும் முயற்சிகள் தேசிய, சர்வதேச அளவில் வலுவான பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
இஸ்லாமிய நாடுகளிலும் உலக நாடுகளிலும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியானதும் அனைவரும் விரும்பக்கூடியதுமான சகவாழ்வு ஆகியவற்றை கட்டியெழுப்புவதில் பல நூற்றாண்டுகளாக முக்கிய பங்காற்றி வருகிறது சவுதி. தீவிரவாதம், பயங்கரவாதத்தை எதிர்த்து மன்றங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வரும் சவுதி, அதன் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் காணொளிகளையும் புத்தகங்களையும் வெளியீடுகளையும் வெளியிடுவது போன்ற விடயங்களையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தலை எதிர்த்துப் போராடும் முன்னணி நாடானசவுதி பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்க்கும் அதன் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாக செயல்படுகிறது.
அதனால் உலகில் எந்த நாடாக இருந்தாலும் அந்நாடுகள், தங்கள் நாடுகளில் பயங்கவாதம் தீவிரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தங்களது நாட்டுப் பிரஜைகள் வாழ்ந்திடவும் சுபீட்சம் மிக்க நிம்மதியான ஆட்சியை நடாத்திடவும் விரும்பினால் அதற்கான முன்மாதிரி நாடாக சவுதி அரேபியாவைக் கொள்ளலாம். அதற்கான முன்மாதிரி மிக்க சிறந்த தலைவர்களாக சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் விளங்குகின்றனர்.
உலகில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், சமாதானம் மலர வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் விருப்பமாகும். இவ்வாறான சூழலில் உலகிலுள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ள இந்த மக்கா சர்வதேச மாநாடு மன்னர், இளவரசர் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் ஆகியோரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் இது காலத்திற்கு அவசியமான சூழலில் நடாத்தப்படும் மாநாடாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இம்மாநாடு வெற்றி பெற்றிட முழு மூச்சாக உழைத்துவரும் மன்னருக்கும், இளவரசருக்கும் இஸ்லாமிய விவகார அமைச்சருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மாநாடு சிறப்பாக நடைபெற்றிடவும் உயர்ந்த இலட்சியங்களையும் இலக்குகளையும் அடைந்திடவும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவைப் பிரார்த்தனை செய்கின்றேன்.
மௌலவி எம்.எச். ஷேஹுத்தீன் மதனி, BA (Hons),
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு.