இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொஹமட் ஷிராஸிற்கு வாய்ப்பு
இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காயம் காரணபாக வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷிராஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (2) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானதில் ஆரம்பமாகவுள்ளது. இத் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட குழாம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஒருநாள் அணியின் புதிய தலைவராக இடது கை மத்திய வரிசை துடுப்பாட வீரரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய அறிவிக்கப்பட்ட 16 வீரர்கள் குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன இந்திய அணிக்கு எதிராக 3ஆவது ரி20 போட்டியின் போது உபாதைக்கு உள்ளானதுடன் அப்போட்டியில் அவர் ஒரு பந்து கூட வீசவில்லை.
அதற்கமைய பத்திரன ஒருநாள் தொடரிலிருந்து விலகியமையால் அவருக்கு பதிலாக சமீப காலமாக கழக மட்ட போட்டிகளில் அசத்திவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஷிராஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மொஹமட் ஷிராஸ் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற போதிலும் அவருக்கு சர்வதேச அறிமுகம் கிடைக்கப் பெறவில்லை. மேலும். இத் தொடரில் சிராஸ் நிச்சயம் தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம். மேலும் பி.ஆர்.சி கழகத்திற்காக விளையாடி வரும் சிராஸ் நேற்று முன்தினம் குருநாகல் வெலகெதர மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் 7 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 21ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக நிறைவுக்கு வந்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3:0 என மிக மோசமாக பறிகொடுத்துள்ள நிலையில் நாளை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை ஒருநாள் தொடரில் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)