உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச..!

அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் போலவே பொதுக் கொள்கையை வழிநடத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் அடிப்படை தத்துவ கோட்பாடுகள் காணப்படுகின்றன. எமது நாட்டு அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே காணப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் தொடர்பில் நீதிமன்றில் சவால் விடுக்க முடியும் என்றாலும், அரசாங்கத்தின் கொள்கைகளை நிர்வகிக்கும் கோட்பாடுகளை நீதிமன்றத்தின் முன் சவால் விடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, சுகாதாரத்துறையை நாட்டின் அடிப்படை உரிமையாக மாற்றத் தேவையான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவேன். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். 220 இலட்சம் பேரினதும் சுகாதார உரிமைகளை பாதுகாக்க கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதன் மூலம் பல சாதகமான பிரச்சினைகள் தீர்க்கப்படும். எனவே சுகாதாரம் மற்றும் பிற சமூக-பொருளாதார உரிமைகளும் அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று(01) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரி சூத்திரமானது நியாயமற்ற ஒன்றாகும். இலக்கை விட அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி சூத்திரம் தொடர்பில் நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். இந்த ஒப்பந்தங்களில் திருத்தங்களை மேற்கொண்டு நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வரி வருவாய் முக்கியமான ஒரு வருமான மூலமாக காணப்படுகிறது. வரி அறவீடு, வெளிப்படைத்தன்மை மற்றும் வரி வலையில் சிக்காதவர்களை உள்ளீர்ப்பதன் மூலம் அரச வருவாயை அதிகரித்துக் கொள்ள முடியும். வரி சூத்திரத்தில் தெளிவான மாற்றத்தை கொண்டு வருவோம். சொத்துக்கள் மீதான வரியை பிறப்பிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். தொழில் வல்லுநர்கள், சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு நியாயமான வரிச்சூத்திரத்தை அறிமுகப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று, சுகாதார கட்டமைப்பில் கடுமையான பிரச்சினையும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கடைப்பிடித்துவரும் மௌனம் மற்றும் அலட்சியத்தால், வங்குரோத்தான நாட்டில் மருந்துப்பொருள் திருட்டு, இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி அதிகரித்துள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரின் செயல் குறித்து சகலரும் அறிந்த விடயமாகும். எனவே, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றின் அடிப்படையிலமைந்த சுகாதார துறையை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உருவாக்குவோம். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசிய சுகாதாரக் கொள்கையை புதிதாக உருவாக்கி, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களை வலுப்படுத்துவோம். 76 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் அரசாங்கமோ எதிர்க்கட்சியோ செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்து காட்டியுள்ளது.

இன்று நாட்டில் இதுவரை வறுமை அதிகரித்துள்ளதையும், அது எந்தளவுக்கு உள்ளது என்பதையும் நாட்டை ஆட்சி செய்பவர்கள் கூட இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஏழ்மையடைந்தோர் தொடர்பில் உண்மையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. வறுமைக் கோட்டை சரியாகக் கண்டறியாமல் அரசாங்கம் இஷ்டத்திற்கு நிவாரணங்களை வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மக்கள் மீது அழுத்தம் கொடுக்காமல், பரந்த கட்டமைப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் சுகாதாரத் துறையை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *