அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் ஸாதிக் ஹாஜியுடன் ஜெம்மியதுல் உலமா சபை சந்திப்பு..!
024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அல்-ஹாஜ் ஸாதிக் ஆகியோரிடையே, அவரினால் நாட்டிற்கு அனுப்பப்பட்டு இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட சந்திப்பொன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் துறைமுகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பதற்கு ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் அல்-ஹாஜ் ஸாதிக் அவர்களுக்கு தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கியதோடு அவற்றிற்கான அடிக்குறிப்புக்களை இணைத்து விநியோகிப்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஜம்இய்யா வழங்கும் என்றும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு அதில் அல்-குர்ஆன் முஸ்ஹப் விடயத்தில் எவ்வித தடைகளும் விதிக்கப்படாமையினால் அவற்றையும் விரைவில் விடுவிக்குமாறு புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றிடம் ஜம்இய்யா வேண்டிக்கொண்டது.
இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உபசெயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித், ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஃபத்வாக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அமீனுதீன், ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் ஆகியோருடன் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.