உள்நாடு

ஜனாதிபதி நாட்டின் மீயுயர் சட்டத்தை பொதுவெளியில் மீறி, நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன. நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாக சவால் விடுவது, ஜனநாயகத்தின் 3 தூண்களுக்குமிடையே இருக்க வேண்டிய தடைகள் மற்றும் சமன்பாடுகள் உட்பட ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பும் முற்றிலுமாக சீரமிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் பாரிய குற்றச் செயல்களால் ஒட்டுமொத்த சமூகமும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பண்டைய காலத்திலிருந்தே, எமது நாட்டின் சமூக அமைப்பு பௌத்த கொள்கைகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டு வந்தன. அது தனிமனிதனிடம் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்தின் மேற்கட்டுமானம் வரை நீண்டுள்ளது. ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட பரஸ்பர கடமைகள் எல்லோருக்கும் இருக்கின்றன. பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிகள், தொழில்முனைவோர், ஊழியர்கள், நண்பர்கள், சாதாரண மக்கள், மத போதகர்கள் ஆகியோருக்கு இடையிலான முழு சமூக கட்டமைப்பும் பரஸ்பர கடமைகள் மற்றும் பொறுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆனால் இன்று இந்த சமூக விழுமியங்கள், பரஸ்பர கடமைகள், சமூக பொறுப்புகள் போன்றவை கடுமையாக சவாலுக்கு ஆளாகியுள்ளன. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேல்வரை சவால் விடும் நிலை காணப்பட்டு வருகின்றன. இன்று நாட்டின் தலைவரான ஜனாதிபதியே மீயுயர் சட்டத்தை வெளிப்படையாக மீறி, நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர்களின் உதவியுடனும் தயவுடனும் மீண்டு ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். நாட்டை ஆட்சி செய்பவர் அநீதி இழைக்கும் போது, ​​சட்டத்தை மதிக்காத போது, ​​திருடர்களைப் பாதுகாக்கும் போது, ​​ஆட்சியாளர் மேலிருந்து கீழ் வரை மோசமான முன்னுதாரணத்தை காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊழல், மோசடி, திருட்டு, சட்டமீறல் என அனைத்து ஒழுக்கக்கேடுகளும் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பிக்குகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *