கம்போடியாவில் மரணமடைந்த ஓட்டமாவடி மௌலவியின் ஜனாஸா 21 நாட்களின் பின்னர் நல்லடக்கம்!
கம்போடியாவில் மரணமடைந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவியின் ஜனாஸா 21 நாட்களின் பின்னர் கம்போடியா நாட்டில் இன்று (31) புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 2 ஆம் வட்டாரம் ஜீ.எஸ்.வீதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கம்போடியா நாட்டில் கடந்த ஜுலை மாதம் 11 ஆம் திகதி மரணமடைந்தார்.
தொழில் நிமித்தம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து சென்ற இவர் மரணமடைந்துள்ளார். தனது அறையில் இருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்த தகவல் கம்போடியா நாட்டிலிருந்து தமக்கு கிடைத்ததாக மரணமடைந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்த நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவரும் ஓட்டமாவடி பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய மௌலவி எம்.எம்.அயூப்கான் என்பவராவார்.
மரணமடைந்த நபரின் ஜனாஸாவை கம்போடியா நாட்டில் நல்லடக்கம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததுக்கமைய அவரின் ஜனாஸா 21 நாட்களின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்த நபர் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஆகியோர்களின் மதினியின் கணவரும், வாகரை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜெமீல் அவர்களின் மச்சானுமாவார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)