அபிவிருத்தி நலன் திட்டங்களை நிறுத்த முடியாது.தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி செயலாளர் பதில்.
“ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும், நலன்புரித் திட்டங்களையும் நிறுத்துமாறு கோரி, அனைத்து அரச பிரதானிகளுக்கும் எழுத்து மூலமாகவும் ஆலோசனைகள் மூலமாகவும் உடனடியாக கட்டளை பிறப்பிக்குமாறு”, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
எனினும், இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,
“அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்களை நிறுத்துவதற்கு அரச அதிகாரிகளைப் பணிப்பதற்கோ அல்லது எழுத்து மூலமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கோ, தனக்கு எவ்வகையிலும் அதிகாரம் கிடையாது” என, தேர்தல்கள் ஆணையாளருக்கு அவரது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பட்ட நியமனங்களை வழங்கல், பதவி உயர்வுகளை வழங்கல், சம்பள அதிகரிப்புச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நலன்புரி வேலைத்திட்டங்களையும் செயற்படுத்த முடியாது. இவ்வாறு செயற்படுத்துவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் எதிர்பார்ப்புப் பணிகளுக்குள் உள்ளடங்கும் என, கண்காணிப்புக் குழு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது கருத்தாக உள்ளது.
இந்நிலையில், இவ்வாறான நீதமற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களை எழுத்து மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும்” என்றும், தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )