இலகு வெற்றியைக் கோட்டைவிட்ட இலங்கை; தொடரை வெள்ளையடித்து கைப்பற்றியது இந்தியா
இலங்கை அணிக்கு எதிரான 3ஆவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இலகு றெ;றியை இலங்கை அணி கோட்டை விட சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
3 போட்டிகய் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி இலகு வெற்றியினை பதிவு செய்து ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என தன் வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று (30) கண்டி பல்லேகல மைதானத்தில் மழை காரணமான 8 மணிக்கு ஆரம்பமானது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியிருந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 4 மாற்றங்களை செய்திருந்ததுடன் இலங்கை அணி முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை வீரருமான தசுன் சானக்கவிற்கு ஓய்வை வழங்கி இளம் வீரரான விக்ரமசிங்கவிற்கு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 39 ஓட்டங்களையும் இ ரயான் பராக் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சன 3 விக்கெட்டுக்களையும்இ வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான பெத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி சற்று சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் பெத்தும் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்திலிருந்த குசல் மெண்டிஸ் தன் பங்கிற்கு 43 ஓட்டங்களையும், குசல் பெரேரா 46 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை நிச்சயித்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களான ஹசரங்க (2), அசலங்க (0), கமிந்து மென்டிஸ் (1) , ரமேஷ் மெண்டிஸ் (3), தீக்சன (0) என மீண்டும் பொறுப்பற்று துடுப்பாட இறுதியில் 2 பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் தேவையாய் இருக்க அறிமுக வீரரான சமிந்து விக்ரமசிங்க இரு பந்துகளுக்கு 4 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள போட்டி சமநிலை பெற்றது. பந்துவீச்சில் ரிங்கு சிங், சூரியகுமார், வாசிங்டன் சுந்தர் மற்றும் பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அந்தவகையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட ஆரம்ப வீரர்களாக இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி களம் நுழைந்தது. இந்திய அணி சார்பில் வாசிங்டன் சுந்தர் பந்துவீசினார். முதல் பந்து வைட் பந்தாக அமைய அடுத்த பந்தில் குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டம் பெற அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் குசல் பெரேரா மற்றும் பெத்தும் நிசங்க ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு 3 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை.
தொடர்ந்து 3 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் நுழைந்தனர். இலங்கை சார்பில் பந்துவீச்சுக்கு தீக்சன அழைக்கப்பட்டிருந்தார். அதற்கமைய முதல் பந்தில் சூரியகுமார் 4 ஓட்டங்களை விளாச இந்திய அணி வெற்றி பெற்றதுடன் தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
(அரபாத் பஹர்தீன்)