உள்நாடு

முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு தேவை..! முஸ்லிம் எம்.பி க்களிடம் கோரிக்கை

தகனம் தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “பாராளுமன்றத் தெரிவுக்குழுவை” நியமிக்க வேண்டும். அநீதியான சம்பவத்தை செய்த குழுவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரிடம் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதற்கும், ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்கள், அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜரொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மகஜரில் மேலும், உடல் உறுப்புகளை தகனம் செய்தல் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்ட விதிமுறைகள் மற்றும் கோவிட் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்றதுடன், அங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட “பாராளுமன்றத் தெரிவுக்குழு” போன்று ஜனாஸா எரிப்பை விசாரிக்கவும் “பாராளுமன்றத் தெரிவுக்குழு” வேண்டும் என்று முஸ்லிம் எம்.பி.க்கள் கூட்டு கோரிக்கையை இதுவரை முன்வைக்காமாய் வருத்தமளிக்கிறது. உடல்களை  தகனம் செய்ய திட்டமிட்ட குழுவுக்கு பின்னால் கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நாட்டுக்கு நல்லது.

இந்த தகனம் எமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைத்தது என்பதையே உணர்த்துகின்றன.  அந்த அநியாயம் நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்தின் இதயங்களைக் கிழிக்கும் வகையில் ஒரு கருத்தியல் ஆயுதமாக அரசியல் மேடையில் உள்ளது. அந்த சித்தாந்த ஆயுதத்தை பயன்படுத்தும் எந்த அரசியல் தலைவர்களும் தகனம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களை ஒரே இடத்தில் கூட்டி அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்குப் பதிலாக அல்லது உடைந்த இதயங்களை அணைப்பதற்கு பதிலாக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அவர்களின் இதயங்களை இன்னும் கொதிப்படையச் செய்கிறார்கள். எனவே நாங்கள் உங்களுக்கு முன்மொழிந்த “பாராளுமன்றத் தெரிவுக்குழு” மூலம் வெளியிடப்படும் அறிக்கைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்களின் குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் தகனம் செய்த குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட “ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியை நான் இராஜினாமா செய்த போது நான் எழுதிய கடிதத்தில், கொவிட் சடலங்களை தகனம் செய்வது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தேன்.  நான் எழுதிய இராஜினாமா கடிதம் மற்றும் “06/23/2024” அன்று நான் எழுதிய கடிதம் “ஜனாதிபதி ஆணைக்குழு” கோரி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு முழு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நான் எழுதிய கடிதமும் எனக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் திருப்தி அடைய முடியாதுள்ளது- என்று தெரிவித்துள்ளார்.

 

 

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *