அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலகுங்கள்; – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
தேர்தலை ஒத்தி வைப்பது நல்லதல்ல, பொலிஸ் மா அதிபர் நியமனம் பாரிய பிரச்சினையாகும், சபாநாயகர், சட்டமா அதிபர் கலந்து பேசி இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என அரசாங்கம் விசித்திரக் கதைகளை கூறி வருகின்றது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அது குறித்து யாரும் பேசவோ, விவாதிக்கவோ முடியாது. சூழ்ச்சிகள் மூலம் தனது ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக் கொள்ள பதில் ஜனாதிபதி முயற்சி செய்து வருகிறார். சபாநாயகர் நீதிபதிகளுடன் கலந்துரையாடுவது நெறிமுறை சார்ந்த விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் உயர் நீதிமன்றத்துடன் விளையாடாமல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சரவையிடம் வேண்டிக்கொள்கிறேன். ஒரு சூழ்ச்சியில் தான் ஜனாதிபதி முதலில் கட்டுப்பணம் செலுத்தினார். அவர் வேட்பாளராக இருப்பதால், பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் தலையீடு செய்ய முடியாது என்று கூறலாம் என்றே அவர் அவ்வாறு செய்தார். ஆனால் அரசியலமைப்பில் அவ்வாறு எதுவும் இல்லை. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு பொறுப்புகள் காணப்படுகின்றன. அவற்றை அமுல்படுத்தாவிடின் வேறு ஒரு ஜனாதிபதிக்கு இடமளித்து பதவி விலகுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொனராகலையில் நேற்று(28) இடம்பெற்ற ஐக்கிய விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று நாட்டில் சதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி நிர்வாகமே காணப்படுகின்றன. இந்த நிர்வாகத்தில் விவசாயிகளை அழித்த, மக்களை வறுமையில் ஆழ்த்திய, போசாக்கின்மையை அதிகரித்து 220 இலட்சம் மக்களை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிட்டு, சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு டீல்களை செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
சஜித்துக்கு வாக்களித்தால் 220 இலட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டு, திருடப்பட்ட பணம் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் நீதிமன்றத்தின் முன் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து வருகிறது. அதனாலயே தேர்தல்களை உரியவாறு நடத்ந தடமாறிக்கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர சிறையில் இருந்த போது, ஆளுந்தரப்பினர் வந்து பலவிதமான டீல்களைச் செய்ய முயன்றனர், ஆனால் அவர் அந்த டீல்கள் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. எந்த அரசியல் பேரத்திலும் சிக்காமல் சட்டத்தை அவர் மதித்து நடந்து கொண்டார். தற்போது அரசாங்கத்திற்குள் பல்வேறு நிதி டீல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த டீல்கள் சாதாரண மக்களை கருத்திற் கொண்டல்லாமல், ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான எந்த டீல்களும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் தலைவணங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டுக்கு சிறந்ததொரு தலைமைத்துவத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன். இன, மத, சாதி, கட்சி பாராமல் தன்னுடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அழைப்பு விடுத்தார்.