மத்திய வரிசையில் தொடர்ந்தும் சறுக்கும் வீரர்களுக்கு திலின கண்டம்பி கடும் எச்சரிக்கை
எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி தெரிவித்துள்ளார்.
நேற்று (28) முடிவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கண்டம்பி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பில் திலின கண்டம்பியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதலளித்த அவர், அணியில் உள்ள மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் இதுபோல் தொடர்ந்து தோல்வியடைந்தால், அணியில் உள்ள திறமையான புதிய வீரர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கப்படும் என்றார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு T20 போட்டிகளிலும் இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட தவறியிருந்தனர். இதன் காரணமாக அந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு தேவையற்ற அழுத்தங்கள் ஏற்பட்டிருந்ததுடன், வெற்றிபெற வேண்டிய வாய்ப்பும் நழுவிச்சென்றது.
இதேவேளை, இலங்கை அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் ஏழு விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.