தொடர்ந்து சறுக்கும் இலங்கையின் மத்தியவரிசை துடுப்பாட்டம்; DLS முறையில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
குசல் ஜனித் பெரேராவின் அதிரடி ஆட்டம் வீண் போக இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க 2ஆது ரி20 போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்ற இந்திய 3ஆவதும் இறுதியுமான போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என கைப்பற்றிக் கொண்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 2ஆவது போட்டி இன்று (28) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது. போட்டி மழை காரணமான சற்று தாமதித்தே ஆரம்பித்திருந்தது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவரான சூரியகுமார் யாதவ் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
குறிப்பான முதல் போட்டியில் பங்கேற்ற அணியிலிருந்து இலங்கை சார்பில் டில்ஷான் மதுஷங்க நீக்கப்பட்டு ரமேஷ் மெண்டிஸ் களம் காண , இந்திய அணி சார்பில் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சய் சம்சன் பதினொருவர் அணியில் இடம்பிடித்தார்.
இதற்கமைய முதலில் களம் புகுந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் களத்திலிருந்த பெத்தும் நிஷங்கவுடன் இணைந்த குசல் ஜனித் பெரேரா ஆரம்பம் முதல் அதிரடி காட்டி மிரட்டினார். இந்த ஜோடி தமக்கிடையில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க பெத்தும் நிஷங்க 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். களத்திலிருந்த குசல் பெரேரா அரைச்சதம் கடந்து அசத்த, கமிந்து மெண்டிஸ் 24 ஓட்டங்களுடன் வெளியேற நிலைத்திருந்த குசல் பெரேராவும் 53 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 139 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து சிறப்பான நிலையில் இருந்தது.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த தசுன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் கோல்டன் டக் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப அணித்தலைவரான சரித் அசலங்க 14 ஓட்டங்களுடனும், ரமேஷ் மெண்டிஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணியின் ஆரம்ப ஜோடியான ஜாய்ஸ்hல் மற்றும் சம்சன் ஆகியோர் களம் நுழைந்தனர். முதல் 3 பந்துகள் வீசப்பட்டிருக்க ஜாய்ஸ்வால் 6 ஓட்டங்களை பெற்றிருக்க போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சுமார் 1 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் இந்திய அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறையில் 8 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பித்த போட்டியின் 2ஆவது ஓவரின் முதல் பந்தில் சம்சன் டக் அவுட்ம ஆகி ஏமாற்றினார் .இருப்பினும் களத்திலிருந்த ஜாய்ஸ்வால் ஆறு நான்கு என விளாச 3ஆம் இலக்க வீரராக வந்த அணியின் தலைவரான சூரியகுமார் யாதவ் தன் அதிரடி ஆட்டத்தை வௌளிப்படுத்த இந்திய அணியின் ஓட்ட வேகம் அதிரடியாக உயர்ந்தது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 51 ஆக இருக்க 26 ஓட்டங்களுடன் சூரியக் குமார் பத்திரணவின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவையாக இருக்க ஜாய்ஸ்வால் 30 ஓட்டங்களுடன் ஹசரங்கவில் சுழலில் வெளியேற களத்திலிருந்த ஹர்திக் பாண்டியா 22 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுக்க இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்று டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என கைப்பற்றியது.
(அரபாத் பஹர்தீன்)