பொலிஸ்மா அதிபரின் பதவி இடை நிறுத்தம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே; இதுதொடர்பாக தன்னால் எந்நேரத்திலும் வாதிடவும் முடியும் – பயங்கர ஊழல் மோசடிகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி அறிவிப்பு
“மனித உரிமைகளை மீறி செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை, அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு சட்டத்தில் இடமுண்டு.அந்த வகையில், மனித உரிமைகளை மீறி நடந்து கொண்ட பொலிஸ் மா அதிபரையும் அவரது சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு தகுதி உள்ளது” என, பயங்கர ஊழல் மோசடிகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லேசில் த சில்வா தெரிவித்துள்ளார்.
“அத்துடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, அவரது சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்ய, உயர் நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு சரியானதே” என்றும் அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (26) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்திப் பேசியுள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், “பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் (26) பொலிஸ் மா அதிபரை உயர் நீதிமன்றம் இவ்வாறு இடை நிறுத்தம் செய்திருப்பது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், பிரதமர் அரசியல் இலாபம் கருதியும், பாராளுமன்றத்தின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகியும் வெளியிடும் இவ்வாறான கருத்துக்கள் மிகவும் பாரதூரமானது. நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பு மற்றும் அரசியல் ஒழுக்கக் கோவையையும் நினைத்தவாறெல்லாம் ஒழுங்கற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கும் பேசுவதற்கும் அரசியல்வாதிகளுக்கு முடியாது. உயர் நீதிமன்ற விவகாரங்களிலும் அவர்களுக்கு எவ்விதத்திலும் கை வைக்க முடியாது.
அந்தவகையில், மனித உரிமைகளை மீறி நடந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை நீக்குவதற்கான முழுமையான உரிமை உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. உயர் நீதிமன்றத்திற்கு இதற்கான அதிகாரமுமுள்ளது.
எனவே, பொலிஸ் மா அதிபர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியானதே. இது தொடர்பான எந்தவொரு கருத்தையும் என்னால் முன்வைக்க முடியும். அத்துடன், எத்தகைய விவாதத்திற்கும் தான் எச்சந்தர்ப்பத்திலும் முகம் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )