பத்திரனவின் வேகமும், நிசங்கவின் அதிரடியும் வீண் போக இந்தியாவிடம் தோற்றுப் போனது இலங்கை
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் மதீஷ பத்திரனவின் வேகமும், பெத்தும் நிசங்கவின் அதிரடியும் வீண் போக 43 ஓட்டங்களால் இலங்கை அணி தோற்றுப் போக தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது இந்திய அணி.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (27) இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகலே மைதானத்தில் ஆரம்பித்திருந்தது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரான சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு கொடுத்திருந்தார்.
இதற்கமைய களம் நுழைந்த இந்திய அணியின் ஆரம்ப வீரர்களான ஜாய்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடி ஆரம்பத்தைக் கொடுத்து 6 ஓவர்களில் 74 ஓட்டங்களை விளாசியிருக்க கில் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜாய்வால் 40 ஓட்டங்களுடன் nபிலியன் திரும்பினார். பின்னர் வந்த அணித்தலைரான சூரியகுமார் யாதவ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி இலங்கை பந்துவீச்சாளர்களை தும்சம் செய்ததுடன் அரைச்சதம் கடந்தும் அசத்தினார். பின்னர் இந்திய அணி 150 ஓட்டங்களை எட்டிப்பிடிக்க சூரியகுமார் யாதவ் 58 ஓட்டங்களுடன் பத்திரனவின் வேகத்தில் வெளியேறினார்.
எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 9 ஓட்டங்களுடனும், ரயான் பராக் 7 ஓட்டங்களுடனும் பத்திரனவின் வேகத்தில் வெளியேற நிதானமாய் களத்தில் துடுப்பெடுத்தாடிய ரிஷப் பாண்ட் 49 ஓட்டங்களுடன் பத்திரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் 214 என்ற கடும் சவால் மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இலங்கை அணிக்கு ஆரம்ப ஜோடியான பெத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தைக் கொடுத்தனர். இந்திய வேகங்களையும், சுழலையும் திணறடித்த இந்த ஜோடி 8.3 ஓவர்களில் 84 ஓட்டங்களை விளாசியிருக்க குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்திலிருந்த பெத்தும் அரைச்சதம் கடந்து மிரட்டி 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயம் இலங்கை அணி 140 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை அண்மித்திருந்தது.
சற்று நேரத்தில் 20 ஓட்டங்களுடன் குசல் பெரேரா வெளியேற இலங்கையின் வெற்றிக் கனவு கலைந்ததுடன் நம்பிக்கை மிக்க துடுப்பாட்ட வீரர்களான அசலங்க (0), தசுன் சானக்க (0), கமிந்து மெண்டிஸ் (12), வனிந்து ஹசரங்க (2) என வந்த வேகத்திலே பெவிலியன் திரும்பினர். பின்வரிசைப் பந்துவீச்சாளர்களான தீக்சன (2), பத்திரன (6) மற்றும் மதுஷங்க டக் அவுட் ஆக இலங்கை அணி 19.2 ஓர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமையால் 43 ஓட்டங்களால் தோற்றுப் போனது.
இதனால் இந்திய அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது. பந்துவீச்சில் ரயான் பராக் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குறிப்பாக இலங்கை அணி இறுதியில் வெறும் 30 ஓட்டங்களுக்கு இறுதி 8 விக்கெட்டுக்களை இழந்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் சோகங்களுக்கு காரணமாய் மாறியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (28) இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)