காருக்குள் கஞ்சா வைத்த விவகாரம்; கான்ஸ்டபிள் இடை நிறுத்தம்
பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கு அமைய, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் அவரும் மற்றுமொரு பொலிஸ் குழுவும் ஆனந்த குமார சுவாமி மாவத்தைக்கும் கேர்ணல் டி.ஜெயா மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், காரில் கஞ்சா போதைப்பொருளை வைத்து சோதனையிடப்பட்டு அந்த காரில் வந்தவர்களைக் கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன்படி, உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து வெற்றிலை பாக்கு உண்டமை, சாரதி அல்லது வாகனத்தில் பயணிக்காத வேறு நபர் மற்றும் உதவி உத்தியோகத்தர் இல்லாமல் வாகனத்தை சோதனை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.