நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஏற்பாட்டில் புலமைப் பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கெளரவம்…!
தர்கா நகர் ஸாஹிரா அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை மற்றும் அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி (27-7-2024)காலை 8.39 மணிக்கு தர்கா நகர் லோடஸ் வீதியில் உள்ள நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி கல்வி நிலைய ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருலாளருமான எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.அம்ஜாத், இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் டாக்டர் ரூமி ஹாஷிம் பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்வர்.
பலபிட்டிய அஷ்ஷரியா மத்ரஸா அதிபர் மௌலவி முஹம்மத் நஸ்மி (முஸ்தபவி) விசேட பேச்சாளராக கலந்து கொள்வார்.
மேற்படி கல்வி நிலையம் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்கி வருகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தர்கா நகரில் உள்ள மேற்படி பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களுக்கு இந்த கல்வி நிலையம் இலவச கருத்தரங்குகளையும் நடத்தியமே விசேட அம்சமாகும்.
தர்கா நகரிலும்,களுத்துறை மாவட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் பாரிய கல்விப் பணிகளை செய்து வருகிறது.
கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)