உலகம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் : இலங்கை 84 ஆவது இடத்தில்…!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அந்தவகையில், சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் இலங்கை கடவுச்சீட்டு, 84 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுக்களின் தரவரிசையை “ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்“ தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில், சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள், இந்த தரவரிசையில் 3 ஆம் இடத்திலுள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இதேவேளை, 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய பிரித்தானியா, நியூசிலாந்து, நோர்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை 4 ஆவது இடத்திலுள்ளன. 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் 5 ஆம் இடத்திலுள்ளன. 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய கிரீஸ், போலாந்து ஆகியவை 6 ஆம் இடத்திலுள்ளன. 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8 ஆம் இடத்திலுள்ளது. 185 நாடுகளுக்கு செல்லக்கூடிய எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் 9 ஆம் இடத்திலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *