உயர நீதிமன்ற தீர்ப்பினை முரண்பாட்டு நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது; சட்டத்தரணி சுனில் வட்டகல
பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாகிறார். தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்ததோடு நிரந்தரமான பொலிஸ் மா அதிபராக நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நியமிக்கப்பட்டார்.
இந்த இருவரும் செய்த நியமனங்கள் சம்பந்தமாகவே உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தேசபந்துவின் நியமனத்தை இடைநிறுத்தி ஒரு நாள் கழிந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பில் எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை. அதன் காரணமாக நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. எனினும் உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தீர்த்துவைத்த ஒரு விடயத்தை ஆயிரம் கோடி ரூபா செலவிட்டு அரசியலமைப்புத் திருத்தமொன்றாக கொண்டுவர தயாராகி வருகிறார்கள்.
ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமை காரணமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப்பிரேரணையொன்று மூலமாக விரட்டியடித்தார்கள். அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகின்றது.
ரணில் விக்கிரமசிங்க தெங்கு அபிவிருத்தி சபையில் ஆற்றிய உரையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதில்லையென குறிப்பால் உணர்த்தினார். மஹியங்கனையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் வைபவத்தில் மக்களின் நீதித்துறை தத்துவம் பாராளுமன்றத்திடமே இருக்கிறதெனக் கூறினார். அரசாங்கம் கொண்டுவந்த கொள்கை ரீதியான விடயங்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார். எனினும் இந்த கீழ்த்தரமான செயல்களின் போது உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியதும் அதனை தாக்கிப் பேசுகிறார்.
மனித உரிமைகளை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்த தருணம் சம்பந்தமாக தீர்ப்பளித்தமையால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அதைப்போலவே பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமையால் தோ்தல் பிற்போடப்படும் என்ற பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது.
இது சரியான வேலையல்லவா? அப்படியானால் இவரும் பதில் ஜனாதிபதி அல்லவா. ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பெறவில்லையே. அப்படியானால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் முறைப்படி தோ்தல் அலுவல்களை ஈடேற்ற முடியும். இதனை எவ்விதத்திலும் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான முரண்பாடுவரை ஓட்டிச் செல்ல வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கவலைப்படுவது ரணில் விக்கிரமசிங்கவின் தேவையாக இருந்த போதிலும் அது நாட்டின் தேவை அல்ல. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தோ்தலை பிற்போட காரணமாக அமையமாட்டாதென்பதை நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். அரசாங்கத்திற்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுவது இந்த நிலைமையை சாதகமானதாக முகாமைத்துவம் செய்து செயற்படுவதேயொழிய முரண்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதாகும்.