இலங்கையர்கள் அமெரிக்காவில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவி செய்யும் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு..!
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்கொள்ளும் பணிகளுக்கூடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான கல்விப் பரிமாற்றங்களை இரு நாடுகளும் ஆதரித்து ஊக்குவிக்கின்றன. ஃபுல்பிரைட் ஆணைக்குழு மற்றும் EducationUSA என்பன இந்த வாரம் நடாத்திய, அமெரிக்காவெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் தமது கல்வி நடவடிக்கைகளில் வெற்றிபெறுவதற்காக மாணவர்களைத் தயார்படுத்தும், புறப்படுவதற்கு முன்பான நெறிப்படுத்தல் நிகழ்வில் 100 இலங்கை மாணவர்களும் புலமையாளர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மையான சர்வதேச கல்விப்பரிமாற்ற விருதான மதிப்புமிக்க ஃபுல்பிரைட் மானியங்களைப் பெற்றுக்கொண்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான குழுவில் ஃபுல்பிரைட் புலமைப்பரிசிலைப்பெற்ற ஐவர், முதுமானிக் கற்கைகளுக்கான ஃபுல்பிரைட் புலமைப்பரிசிலைப்பெற்ற ஐவர், Fulbright Teaching and Excellence Achievement Program நிகழ்ச்சித்திட்டத்தின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் Fulbright Humphrey Awards நிகழ்ச்சித்திட்டத்தின் நம்பிக்கைக்குரிய தொழில்வல்லுநர்கள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். இந்த மனதில்பதியத்தக்க ஃபுல்பிரைட் மானியத்தைப் பெறுவோர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம், UCLA மற்றும் நோர்த் கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழகம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் சட்டம், மொழியியல், போக்குவரத்து பாதுகாப்பு, தொழில்முனைவு மற்றும் நெல் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகரும் ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் தலைவருமான ஹைடி ஹட்டன்பக் “உங்களது கல்விப் பயணத்தைத் தொடர்வதற்காக அமெரிக்காவை நீங்கள் தேர்ந்தெடுத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்வரும் வருடங்கள் நிறைய கற்றல் அனுபவங்களையும் மற்றும் பல புதிய வாய்ப்புகளையும் உங்களுக்குத் தரும். எனினும் கல்விப் பரிமாற்றங்கள் என்பவை உயிரியல் அல்லது வான்பௌதீகவியல் பற்றியது மட்டுமன்றி; அமெரிக்க இலங்கை உறவின் இதயமாக விளங்கும் எமது நாட்டு மக்களுக்கிடையில் காணப்படும் மக்கள் உறவுகளையும் அவை வளப்படுத்தி பலப்படுத்துகின்றன. உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, எமது இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் கௌரவத்தையும் வளர்த்து, நீங்கள் சந்திக்கும் அனைவருடனும் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தமது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு EducationUSA ஆலோசனை சேவைகளைப் பயன்படுத்திய கிட்டத்தட்ட 90 மாணவர்களும் இந்த நெறிப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களில் பலர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிடமிருந்து தமது கல்வி நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளையும் பெற்றுக் கொண்டனர். விண்ணப்ப நடைமுறைகளின் போது எதிர்கொள்ளும் பொருளாதார தடைகளை கடப்பதற்கு அதியுயர் தகுதிகளைக் கொண்ட சர்வதேச மாணவர்களுக்கு உதவி செய்யும் EducationUSA Opportunity Fund Program எனும் நிகழ்ச்சிதிட்டத்தின் ஊடாக மிகமுக்கியமான உதவியைப் பெற்றுக் கொண்ட இருவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் வேய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் கலாநிதிப்பட்டப் படிப்பையும், மற்றவர் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் கலாநிதிப்பட்டப் படிப்பையும் தொடரவுள்ளனர்.
“இந்த குறிப்பிடத்தக்க புலமையாளர்களும் மாணவர்களும் கல்விப் பரிமாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்திற்கான உதாரணமாக விளங்குகின்றனர். இவர்கள் நாடு திரும்பியதும், இலங்கைக்கு பயனளிக்கும் வகையில் தமது அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஏனைய ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் பாரம்பரியத்தை தொடர்வார்கள். எமது இரு-தேசிய ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அமெரிக்க மற்றும் இலங்கை மக்களிடையே பரஸ்பர புரிதல் மற்றும் அவர்களுக்கிடையிலான தொடர்புகள் எனும் பாலங்களை நாம் உருவாக்குகிறோம். சில சமயங்களில் பிளவுபட்டிருப்பதாகத் தோன்றக்கூடிய ஒரு உலகில், பரிமாற்றங்கள் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் US-SLFC ஒரு நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா தெரிவித்தார்.
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவைப் பற்றி
1952 இல் தாபிக்கப்பட்ட அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவானது ஒரு தன்னாட்சியுடைய, இரு-தேசிய, அரசியல்சார்பற்ற, அரசு சாரா ஆணைக்குழுவாகும். கல்வி, கலாச்சார மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் ஊடாக புரிந்துணர்வு மற்றும் அமைதியின் பாலங்களை உருவாக்குவதே அதன் செயற்பணியாகும். இலங்கையில் அது செயற்படும் ஏழு தசாப்தங்களாக 2,000இற்கும் அதிகமான இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கான பரிமாற்றங்களை இவ்வாணைக்குழு மேற்கொண்டுள்ளது. அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதை ஊக்குவிக்கும் EducationUSAஇனையும் இவ்வாணைக்குழு மேற்பார்வை செய்கிறது.
EducationUSA இனைப் பற்றி
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும், EducationUSA ஆனது, உயர்தரத்திற்குப்பின்னரான கற்கைநெறிகளை வழங்கும் அமெரிக்காவிலுள்ள அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பற்றிய துல்லியமான, விரிவான மற்றும் நிகழ்கால தகவல்களை இலவசமாக வழங்கி அமெரிக்காவில் உயர்கல்வியினைத் தொடர்வதை ஊக்குவிக்கிறது.
அமெரிக்கா-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் பணிகள் பற்றியும் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை நகரங்களில் அது ஏற்பாடு செய்யவுள்ள, அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை ஆட்சேர்ப்புச்செய்யும் அலுவலர்கள் பொது மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஒரு நிகழ்வான September Road Show இனைப்பற்றியும் மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு http://www.fulbrightsrilanka.org இனைப் பார்வையிடவும்.
பட விளக்கங்கள்:
படம் 1: மாணவர்கள் புறப்படுவதற்கு முன்பான நெறிப்படுத்தல் நிகழ்வில் இலங்கை மாணவர்களை சந்திக்கும் ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் சபைத்தலைவர் ஹைடி ஹட்டன்பக்
படம் 2: புறப்படுவதற்கு முன்பான நெறிப்படுத்தல் நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடும் ஃபுல்பிரைட் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெட்ரிக் மெக்னமாரா.
படம் 3: புறப்படுவதற்கு முன்பான நெறிப்படுத்தல் நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடும் துணைநிலைத் தூதுவர் டக்ளஸ் சொனெக்
படம் 4: ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் சபைத்தலைவர் ஹைடி ஹட்டன்பக் மற்றும் ஃபுல்பிரைட் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா ஆகியோருடன் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கும் மாணவர்களும் புலமையாளர்களும் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படம்.