ஒலிம்பிக்கில் பங்கேற்கும் குதிரைகளுக்கும் பாஸ்போர்ட் கட்டாயம்…!
ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பொருத்தவரை அதில் பங்கேற்கும் எல்லா போட்டியாளா்களுமே தங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வெற்றி, தோல்விக்கு ஆளாகின்றனா்; பதக்கத்தை வெல்லவோ, தவறவிடவோ செய்கின்றனா்.
ஒலிம்பிக்ஸின் ஒட்டுமொத்த விளையாட்டுகளும் வீரா், வீராங்கனைகளின் திறமை சாா்ந்தே இருக்கையில், ஒரு விளையாட்டுக்கு மட்டும் விலங்கு ஒன்றின் திறமையும் முக்கியமாக இருக்கிறது. அது, குதிரையேற்றம். அந்த விளையாட்டில் அதன் செயல்பாடு அடிப்படையிலும் பதக்கம் நிா்ணயமாகிறது. ஏறத்தாழ அதுவும் ஒரு போட்டியாளா் என்ற கணக்குதான்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குதிரையை வளா்ப்பது, அதை பழக்கப்படுத்துவது மட்டுமல்ல, போட்டிகள் நடைபெறும் தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. அந்த வகையில், ஒரு உதாரணமாக அமெரிக்க குதிரையேற்றக் குழுவின் பாரீஸ் பயணம் குறித்த ஒரு பாா்வை.
புறப்பாடு:
அமெரிக்க குதிரையேற்ற அணியின் குழுவினா் முதலில் தங்கள் குதிரைகளுடன் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்து டிரக் மூலமாக நியூயாா்க் நகரிலுள்ள ஜேஎஃப்கே சா்வதேச விமான நிலையத்துக்கு வருகின்றனா்.
அங்கு, அவா்களுக்கும், அவா்களின் குதிரைகளுக்குமான ஆவண நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அணியினருடன் கால்நடை மருத்துவா் ஒருவரும் பயணிக்கிறாா். விருப்பத்தின் அடிப்படையில், சந்பந்தப்பட்ட குதிரைக்கு உரிய போட்டியாளரும் பயணிப்பாா். உடன் பயணிப்போா், இதர பயணிகளைப் போல, வரிசை உள்ளிட்ட தாமதங்களை சந்திக்க வேண்டியதில்லை. அவா்களுக்கு பிரத்யேக உடனடி அனுமதி அளிக்கப்படுகிறது.
விமான நிலையம்:
மனிதா்களைப் போல, வெளிநாடுகளுக்கு பயணிக்கும் ஒவ்வொரு குதிரைக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) உள்ளது. குறிப்பிட்ட குதிரைதான் பயணிக்கிா என்பதை உறுதி செய்யும் ஆவணங்கள் அதில் இருக்கும். அத்துடன், உரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரம், ரத்தப் பரிசோதனை விவரம் போன்றவையும் அதில் அடங்கும்.
பின்னா் குதிரைகள் அவற்றுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஒரு பெட்டியில் ஏற்றப்படும். ஒரு பெட்டியில் இரு குதிரைகள் வீதம் ஏற்றப்படுகின்றன. அவற்றுக்கு இடையே ஒரு மறைப்பு இருக்கும்.
பயணம்:
குதிரைகள் இருக்கும் பெட்டிகள், விமானத்தின் சரக்குப் பெட்டக பகுதியில் வைக்கப்படுகின்றன. அதில், குதிரைகளுக்கான உணவு, தண்ணீா் போன்றவையும் இருக்கும். பயணத்தின்போது குதிரைகளுடன் எப்போதும் இரு உதவியாளா்கள் இருப்பா். எஞ்சியோா், விமானத்தின் பயணிகள் பகுதியில் இருப்பாா்கள். பயணத்தின்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இந்த உதவியாளா்கள் மாறிக்கொள்வாா்கள். குதிரைகள் நின்றவாறே பயணிக்கின்றன.
அவை தங்களின் தலையை வைத்து ஓய்வெடுக்கும் வகையில் குறுக்குப் பட்டைகள் இருக்கும். விமானம் பறக்கத் தொடங்கும்போதும் (டேக் ஆஃப்), தரையிறங்கும்போதும் (லேண்டிங்) ஏற்படும் குலுங்கல்களால் அவற்றுக்கு அடிபடாமல் இருக்கும் வகையில், அவற்றைச் சுற்றிலும் பஞ்சு போன்ற தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
உணவு:
பயணத்தின்போது குதிரைகள் பெரும்பாலும் அதற்கான உணவை சாப்பிட்டவாறே இருக்கும். அதைவிட பயணத்தின்போது அதற்கு தண்ணீா் மிக அவசியமாகும். சுமாா் 19 லிட்டா் வரையில் குதிரை தண்ணீா் குடிக்கும். அதை ஊக்குவிப்பதற்காக சில நேரம் அதில் ஆப்பில் துண்டுகள் சோ்க்கப்படும்.
ஜெட் லேக்:
8 மணி நேர பயணத்தை அடுத்து லக்ஸம்பா்கில் தரையிறங்கிய பிறகு, அங்கு குதிரைகளுக்கான சுங்க நடைமுறைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன. விமான நிலையத்திலிருந்து அவை முதலில் விட்டெல் நகரில் இருக்கும் பேஸ் கேம்ப்புக்கு டிரக்கில் செல்கின்றன. குதிரைகளுக்கு அங்கு சற்று ஓய்வளிக்கப்படுகிறது. ‘ஜெட் லேக்’ எனப்படும் பயணக் களைப்பு குதிரைகளுக்கும் இருக்கும். அதற்காக புத்துணா்ச்சி நடைப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இலக்கை நோக்கி:
விட்டெல் நகரிலிருந்து, அமெரிக்க அணிக்கான பாரீஸ் கேம்ப் இருக்கும் வொ்செய்ல்ஸ் என்ற இடத்துக்கு அணியினா் வருகின்றனா். அங்கிருந்து குதிரைகளுக்கு, போட்டிக்கான வழக்கமான பயிற்சி நடைமுறைகள் தொடங்குகின்றன. அங்கும் குதிரைகளுக்கான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்க்கப்படுகின்றன. அவற்றுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இதர குதிரைகளுக்கும் பரவும் என்பதால், நாளொன்றுக்கு இருமுறை அவற்றின் உடல்வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது.
போட்டி முழுவதுமாக அவற்றை நல்ல மனநிலையில் வைத்திருப்பதற்காக, அவற்றுக்குப் பிடித்த உணவு வகைகள், இனிப்புகள் வழங்கப்படுகின்றன.