உள்நாடு

எம்.எஸ். காரியப்பரில் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூரின் நினைவு தினமும் பரிசளிப்பு வைபவமும்..!

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் “கறை படியாச் சேவைகள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற நினைவு தின கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் ஏ.ஆர். மன்சூரின் நினைவு தினமும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் (25) நேற்று இடம்பெற்றது.

ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் அனுசரணையில், சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எல். நாபித், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சீ. ஆதம்பாவா மற்றும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் அதன் செயலாளர் ஐ.எல்.ஏ. மன்சூர், பாடசாலையின் முன்னாள்,  இந்நாள் ஆசிரிய, ஆசிரியைகள், பழைய மாணவர் சங்கத்தினர், பழைய மாணவர் அபிவிருத்திக் குழுவினர், சாய்ந்தமருது – கல்முனை பிரதேசத்தின் முதுசங்கள், ஏ.ஆர். மன்சூரின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், அதிபர் வரவேற்புரையும் தலைமையுரையையும் நிகழ்த்தினார்.
அவ்வுரையில், பாடசாலையினுடைய அத்தியாவசியத் தேவைகள், பிரதேசத்தினுடைய தேவைகள், மற்றும் இப்பிரதேசம் சாய்ந்தமருதின் தலைநகரமாக எதிர்காலத்தில் மாறும் என்றும் இங்கே இருக்கின்ற கலாசார விழுமியங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் இந்தப் பாடசாலை எதிர்காலத்தில் உயர்ச்சி பெற வேண்டும் என்றும் அதிபர் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து  ஏ.ஆர் மன்சூர் பற்றி மாணவி ஒருவரின் பேச்சு ஒன்றும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் பற்றிய நினைவுப் பேருரையை முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.அப்துல் கபூர் நிகழ்த்தினார்.
அவர் தனது உரையின் போது, மிகக் கூடுதலான அவரது அருமை, பெருமைகளை, சிறப்புகளை, அவர் தன் வாழ்நாளில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது பற்றியும், அவர் ‘மிஸ்டர் க்ளீன்’ என்று ஏன் அழைக்கப்பட்டார் என்றும் அவரது வாழ்நாளில் பதவியின் மூலமாக எந்த துஷ்பிரயோகங்களும் செய்யாத நிலையில் சிறந்த மனிதராக வாழ்ந்தார் என்றும், அவரைப் போற்றிப் புகழ்வோம், அவருக்காக துஆச் செய்வோம் என்றும் அவருக்காக நிறைய அன்பளிப்பு மற்றும் உதவிகளைச் செய்து வருகின்ற அவருடைய மகள் மற்றும் மகன்களை நினைவு கூருவோம் என்றும் அவர் பாதுகாத்துத் தந்த விடயங்களைத் தொடர்ந்து பாதுகாப்போம், கல்முனையைப் பாதுகாப்போம் என்றெல்லாம்  பல விடயங்களைப் பேசினார்
இதன்போது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசுகளை  அதிதிகள் வழங்கி வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூரின் அவரது மறுமை ஈடேற்றத்திற்காக மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எம். தௌபீகினால் துஆப் பிரார்த்தனை ஒன்றும் நிகழ்வில் இடம்பெற்றது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர், அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *