‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித் நிகழ்வு..!
‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித்’ நிகழ்வு ஜாமிஆ வளாகத்தில் (23) காலை 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நடைபெற்றது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக நோக்கப்படும் இந்நிகழ்வு பல்லின சமயத்தவர்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதில் மிகப்பெரும் பங்கை வகிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜாமிஆ நளீமிய்யாவின் ஒரு பிரிவான சமாதானத்துக்கும் உரையாடலுக்குமான ஸலாம் நிலையம், இஸ்லாமிய கற்கைகளுக்கான மத்திய நிலையத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் முஸ்லிம்கள் அல்லாத ஏனைய மதங்களைச் சேர்ந்த 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் ஆரம்ப வைபவம் நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மதின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதி அதிதியாகவும் பேருவளை பிரதேச செயலாளர் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
பேருவளை பிரதேசத்தில் உள்ள மதஸ்தலங்களின் பிரதான மதகுருக்கள், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், நகர சபை அதிகாரிகள், வைத்தியசாலை உயர் அதிகாரிகள், சுகாதார சேவை உத்தியோகஸ்தர்கள், கிராம சேவகர்கள், மதங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்கும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆரம்ப வைபவத்தில் ஜாமிஆ கலாபீடத்தின் முதல்வர் வரவேற்புரை மற்றும் அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலாபீடம் பற்றிய சிங்கள மொழியில் அமைந்த ஒரு காணொளி திரையிடப்பட்டதுடன் பேருவளை பிரதேச செயலகத்தின் பௌத்த விவகார இணைப்பாளர் அஹங்கம மைத்திரி மூர்த்தி தேரரின் ஓர் உரையும் இடம்பெற்றது.
திறந்த மஸ்ஜித் நிகழ்ச்சித் திட்டம் குறித்து அஷ்ஷெய்க் முனீர் முழப்பர், ஓர் அறிமுகத்தை வழங்கினார். முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஏ. ரிப்லான் பிரதம அதிதி உரையை நிகழ்த்தினார்.
ஜாமிஆவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.பீ.எம். அப்பாஸின் நன்றியுரையுடன் வைபவம் நிறைவுக்கு வந்தது.
ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து, பிரமுகர்கள் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் மஸ்ஜிதில் இடம்பெற்ற திறந்த மஸ்ஜித் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொழுகை உட்பட முஸ்லிம்களின் ஏனைய வணக்க வழிபாடுகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் முஸ்லிம் கலாசார அம்சங்கள் பற்றிய சுருக்கமான தெளிவும் வழங்கப்பட்டன. மேலும் கலாபீடத்தின் வளாகத்தைப் பார்வையிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் பற்றியும் மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்தும் திருப்திகரமான தெளிவுகள் கிடைத்தாக நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)