வறுமை அதிகரித்து காணப்படுவதால் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எண்ணற்ற அசௌகரியத்துக்கும், அழுத்தத்தங்களுக்கும் ஆளாகியுள்ளனர். சில பிள்ளைகள் உண்ணாமலே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். நாட்டின் பல் பரிமாண வறுமை அதிகரித்து காணப்படுகிறது. எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடிப்பின் பிரகாரம், வறுமை அதிகரித்து, இலட்சக்கணக்கான சிறிய, மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மைகள் மூடப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வியாபாரங்களின் வீழ்ச்சி, தொழில்களில் சரிவு, வேலை இழப்பு, வறுமை அதிகரிப்பு போன்றவற்றால் பாடசாலை பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் காரணமாக கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 364 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு, ஹோமாகம பிடிபன மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வறுமையினால் பாதிக்கப்பட்டு வரும் பிள்ளைகள் மீது எந்த கவனம் செலுத்தப்பட்டபாடில்லை. சகல பாடசாலை பிள்ளைகளுக்கும் பாடசாலையில் நிரந்தர மதிய உணவு வழங்குவது தற்காலிக பாதுகாவலர்களாக இருந்துவரும் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சகல பாடசாலைகளும் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றப்பட்டு, சகல பிள்ளைகளுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.