இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடருக்கான அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள இக் குழாத்துக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக முதலில் சூரியக்குமார் யாதவ் தலைமையிலான இந்திய ரி20 குழாம் நேற்று இலங்கையை வந்தடைந்தது. அதற்கமைய முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிரவரும் 2ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அதனடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான இலங்கைக் குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்தகையில் ரி20 உலகக்கிண்ணத் தொடருடன் அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்க விலகிக் கொள்ள புதிய தலைவராக இடது கை மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இடம்பெற்று முடிந்த எல்.பி.எல் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைராகவும் அசலங்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியைப் பொறுத்தவரையில் உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து அஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம போன்ற துடுப்பாட்ட வீரர்கள் இத் தொடரிலிருந்து கழற்றிவவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்ணான்டோ, மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இடம்பெற்றுமுடிந்த 5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடரில் சகல துறையில் அசத்திய இளம் வீரரான சமிந்து விக்கிரமசிங்க இத் தொடருக்கு அறிமுக வீரரான இணைக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னனி வீரர்களான பெத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க மற்றும் வெல்லாலகே ஆகியோரும் அணியில் உள்ளனர்.
மேலும் முன்னால் அணித்தலைவரான வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்சன, மதீச பத்திரன, நுவன் துஷார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் பந்துவீச்சாளர்களாக அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் முதல் போட்டி 27ஆம் திகதியும், 2ஆவது போட்டி 28ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதுடன் 3ஆவதும் இறுதியுமான போட்டி 30ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போட்டிகள் அனைத்தும் இரவுப் போட்டிகளாக இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ரி20 தொடருக்காக இலங்கை குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரன, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமிர, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமல், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிந்து விக்கிரமசிங்க
(அரபாத் பஹர்தீன்)