பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது வருடப் புலமைப் பரிசில் வழங்கும் விழா…!
பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் ,குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவர்களுக்கான 11 ஆவது வருட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (21) பேருவளை , மஹகொட ஐ.எல்.எம் சம்சுதீன் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்வி நிலையத்தின் தாவிசாளர் எம்.ஜே.எம் நிஸாம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஹமத் பின் அலி பின் சயீத் அலி ராஷிதி மற்றும் பாலஸ்தீன நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் ஹிஷாம் அபூ தாஹா அவர்களும் கலந்துகொண்டனர்.
அப்ரார் கல்வி நிலையத்தின் போசகரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் விசேட பேச்சாளராக ஸம் ஸம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி முஹம்மத் ஹிஷாம் அவர்கள் கலந்துகொண்டு விசேடஉரையாற்றினார்.
தனது விசேட உரையில் , மாணவ மாணவிகளுக்கான அறிவுபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தார்,தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தனது கருத்துகளை முன்வைத்துக் கூறியபோது,இன்று வசதி குறைந்த நிலையில் உங்கள் திறமை ஆற்றல்களை வெளிப்படுத்தி உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளீர்கள் ,படிப்பைத் தொடர உங்களுக்கு இன்று புலமைப் பரிசில் தரப்படுகிறது,இதன் மூலம் கல்வித்துறையில் மேலும் உயர்வடைய உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.இதேபோன்று படித்து வசதி வாய்ப்பு ஏற்படும் நிலையில் உங்களாலும் படித்து முன்வருவோருக்கு இதேபோன்று உதவவும் முடியுமாககின்றது.மூன்றாவதாக சமூக வளர்ச்சி மேம்பாடுகளுக்காக உங்களால் சாதனைகள் நிலைநாட்டி வரலாறு படைக்கவும் இயலுமாகிறது. இதற்காக இன்றே இலட்சியம் பூனுங்கள் அதற்காக நிய்யத் வையுங்கள் என்றார்.
மஹகொட ஸாவியாவின் பிரதான இமாம் முஹம்மத் அலி அவர்களினால் ,பாலஸ்தீன தேசத்திற்காக உருக்கமான பிராத்தனை நிகழ்வொன்றும் இங்கு நடைபெற்றதோடு,பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் சார்பாக அவரது மகன் ராசிக் மர்ஜான் பலீல் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை மஹகொட ஐ.எல்.எம் சம்சுதீன் வித்தியாலய மற்றும் மஹகொட அஹதியா மாணவர்களின் அழகிய கலாசார நிகழ்வுகளும் அரங்கேறிய இந்நிகழ்வில் பேருவளை முன்னாள் நகர பிதா அல்ஹாஜ் மாசாஹிம் முஹம்மத் ,முன்னாள் உப நகர பிதா அல்ஹாஜ் ஹஸன் பாஸி , அப்ரார் கல்வி நிலையத்தின் செயலாளர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் (அல் அஸ் ஹரி) ,பொருளாளர் அல்ஹாஜ் ஹலீம் ஏ.அஸீஸ் ,ஐ.எல்.எம் சம்சுதீன் வித்தியாலய அதிபர் திருமதி சிஹானா ,பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியர் தேசியப் பாடசாலை அதிபர் எஸ். ஏ குமார் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்,பேருவளையின் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் ,தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் திறமையான சுமார் 70 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கிவைக்கப்படதோடு, அப்ரார் கல்வி நிலையத்தின் முன்னாள் செயலாளர் இக்பால் சம்சுதீன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் அப்ரார் கல்வி நிலைய அங்கத்தவர்கள்,பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் , கல்வி நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள் மற்றும் இன்னும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை : பீ.எம் முக்தார்)