ஜனாஸா எரிப்பு: முட்டாள்களின் தீர்மானம்..! -திஹாரிய அல் அஸ்ஹர் நிகழ்வில் சஜித் பிரேமதாச
உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம் உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கல்வியறிவு இல்லாத ஒரு முட்டாள் கூட்டம், முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை தடுத்து தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் முட்டாள்கள் போல் நடந்து கொண்டனர். கோவிட் மரணம் ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிக்கும் இனவாத நோக்கத்துடன் ஜனாஸாக்களை எரித்தனர். உலக சுகாதார ஸ்தாபனத்தை பார்க்கிலும் புத்திசாலிகள் என்ற மமதையில் செயற்பட்டனர். இது அறிவில்லாத செயற்பாடாகும். ஜனாஸா எரிப்பு என்பது முட்டாள்களின் முட்டாள்தனமான தீர்மானமாகும். எமது நாட்டின் ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களை ஒடுக்கி, இனவாதத்தையும் மதவாதத்தையும் தலைதூக்கி செயற்பட அனுமதித்து, முட்டாள்கள் போல் தீர்மானங்களை எடுத்து, முட்டாள்தனமான நடந்து கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எமது நாட்டில் தரமான சிறந்த கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியின் மூலம் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் ஒழிக்கப்படும். சிங்கள சமூகமோ, தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ, பர்கர்களோ, தீவிரவாதப் போக்கை கடைப்பிடிப்பார்களானால் அதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். எல்லா சமூகத்தையும், எல்லா மதத்தையும், எல்லா இனத்தையும் மதிக்கும் நாகரிகம் மிக்க குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 340 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, அத்தனகல்ல, திஹாரிய, அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இஸ்லாமிய மக்களை, முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட சகல விடயங்களுக்கும் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் முன் பதில் அளிக்க வேண்டும். இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இங்கு இடமில்லை. இந்த பிரிவினைகளை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும். இனவாதம் என்பது விஷ கிருமியாகும். இந்த புற்றுநோயை சமூகத்திலிருந்து இல்லாமல் செய்ய வேண்டும். நாடு பட்டினி வாடிய போது, வரிசைகளில் இருந்த போது மத அடிப்படையில் பிரித்து பார்க்கவில்லை. அனைவரும் ஒன்றாக இருந்தோம். பட்டினி மத பார்த்து வருவதில்லை. எனவே வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத ஒற்றுமை அத்தியாவசியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமானால், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லறவு மிகவும் முக்கியமானதாகும். இதுவே தெளிந்த மனதின் பண்பாகும். கல்வியின் ஊடாகவே இந்த உயரிய மனப்பாங்கு உருவாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.