உள்நாடு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும், ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்..! -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்து வந்த வரையறையற்ற அதிகாரங்களை, சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே, 19 ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் (20) சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் தொடர்பில் நானே மிகவும் அறிந்தவன். ஏனெனில், நாம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களைக் குறைத்து, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடமாகக் குறைக்கவேண்டும் எனத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், 19 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என முறையாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அத்துடன், இன்று அதிகமானவர்கள் 18 ஆம் திருத்தத்தை மறந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தனக்குத் தேவையான வகையில் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ளவே, 18 ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நான் பொது வேட்பாளராக வந்து, 18 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த பாரியளவிலான அதிகாரங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இதன்போது, மைத்திரிபால சிறிசேனவின் 6 வருட ஜனாதிபதி பதவிக்காலத்தை 5 ஆகக் குறைக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருங்களில் இருந்து 5 வருடமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றே, பாராளுமன்றத்தில் 19 ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டதாக, உயர் நீதிமன்றில் எனது சட்டத்தரணியாகவிருந்த ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரமே, உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்போது 6 வருடத்தை 5 ஆகக் குறைக்க முடியும். அதற்கு மேல் குறைப்பதாக இருந்தால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. அதன்போதுதான், அதிகமான சட்டத்தரணிகள் 6 வருட காலத்தை 7 வருடமாக அதிகரிப்பதாக இருந்தால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும் எனவும், ஆனால் 6 வருடத்தை 5 ஆகக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையில்லை எனத் தெரிவித்தனர்.

எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும் என்பதாகும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் – எம்.ஆர்.எம். வஸீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *