உள்நாடு

அமைச்சர் அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறையில் வீதிகள் மற்றும் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டங்கள்..!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்டத்தில்  களுத்துறை பிரதேச செயலகப்   பிரிவின் பல்வேறு வீதிகள் காபர்ட் பாதைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் பல்வேறு  பௌதீக வள அபிவிருத்திப் பணிகளுக்கான வேலைத் திட்டங்கள்   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

      அரசாங்கத்தின் ஆயிரத்து ஐநூறு கிலோ மீற்றர் வீதி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பல்வேறு வீதிகள் அமைச்சரின் வேண்டுகோளின்  பயனாக வீதி அபிவிருத்தி  அதிகார சபையினால் காபர்ட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
       மேற்படி காபர்ட் வீதி திட்டத்தின் கீழ் களுத்துறை நகராட்சிமன்ற பிரிவைச் சேர்ந்த சேக் நூர்தீன் மாவத்தை, களுத்துறை தெற்கு குரே வீதி, பெட்ரிக் பீரிஸ் மாவத்தை, வாவி வீதி (வெவ வீதி),  ஜயசுந்தர மாவத்தை, விக்ரமசிங்க பிளேஸ், மரிக்கார் வீதி மற்றும் மபூர் கிரசன்ட்   ஆகிய வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் துரிதமாக நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
           இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம்  கையளிக்கும்  நிகழ்வுகள்  பொதுமக்களின் பங்களிப்புடன் குறிப்பிட்ட வீதிகள் அமைந்துள்ள பகுதிகளில்  அண்மையில் இடம்பெற்றது.வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதிகளின் பெயர்ப் பலகைகளை திரை நீக்கம் செய்து வைத்தார்.
         இதே வேளை, களுத்துறை வாழ் மக்களின் இரண்டு கண்கள் போன்றதாக விளங்கும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் களுத்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரிகளின் குறைபாடுகள் தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக அமைச்சர் இப்பாடசாலைகளுக்கு கள ஆய்வு விஜயம் மேற்கொண்டதுடன் இந்த விஜயத்தில் மேல்மாகாண ஆளுநர் ஏயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலகவும் பங்களிப்புச் செய்தமை சிறப்பம்சமாகும்.
          வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் முயற்சியின் பயனாக மேற்படி இரண்டு கல்லூரிகளுக்கும் மூன்று மாடிக் கட்டிட தொகுதிகள் மேல்மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.இதற்கான அத்திவாரக்கல் நாட்டு விழா கல்லூரி அதிபர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.இந்த கல்லூரிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அமைச்சர் மற்றும் மேல்மாகாண ஆளநர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்வுகளில் கல்வித் திணைக்கள அதிகாரிகள்,  களுத்துறை நகராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிஷாம்  சுஹைல்  உள்ளிட்ட பிரமுகர்கள், பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *