விளையாட்டு

5ஆவது எல்.பி.எல் தொடரில் 4ஆவது முறை மகுடம் சூடிய ஜப்னா கிங்ஸ்..!

5 ஆவது லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் ரொஸ்ஸோ மற்றும் குசல் மெண்டிஸின் அசத்தல் இணைப்பாட்டம் கை கொடுக்க திக்வெல்ல தலைமையிலான காலி மார்வெல்ஸ் அணியை 9 விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வீழ்த்திய அசரித் அசலங்க தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி 4ஆவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை தன் வசமாக்கி அசத்தியது.

5 ஆது லங்கன் பிரீமியர் லீக் ரி20 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரு இடங்களைப் பெற்ற காலி மார்வல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் முதல் குவாளிபயர் போட்டியில் பங்கேற்றிருக்க அதில் காலி மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் அதே தினத்தில் இடம்பெற்ற 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கான எலிமினேட்டர் போட்டியில் கண்டி பொல்கோன்ஸ் அணி கொழும்பு ஸ்டைகர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

அதற்கமைய 2ஆவது குவாளிபயர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை நடப்புச் சம்பியனான கண்டி பொல்கோன்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வீழ்த்தி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
அதற்கமைய 5ஆவது லங்கன் பிரீமியர் லீக் தொடரின் தீர்க்கமான இறுதிப் போட்டி இன்று (21) இரவுப் போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவரான சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தார். இதற்கமைய களம் நுழைந்த காலி மார்வெல்ஸ் அணிக்குஆரம்ப வீரர்களான அணித்தலைவரான திக்வெல்ல (5) மற்றும் அலெக்ஸ் ஹோல்ஸ் (6) ஆகியோர் எதிர்பார்த்த ஆரம்பத்தைக் கொடுக்கத் தவறினர். இருப்பினும் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரரான செபேர்ட் தன் பங்கிற்கு 47 ஓட்டங்களை அடித்துக் கொடுத்திருந்தார். இருப்பினும் மத்திய வரிசையில் வந்த அதிரடி வீரரான பானுக்க ராஜபக்ஷ அதிரடியில் மிரட்டி ஆறு, நான்கு என விளாசித் தள்ள காலி அணியின் ஓட்ட வேகம் 150 ஐ கடந்தது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுக ராஜபக்ஷ 6 சின்ஸர்கள் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 34 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாச காலி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசித்த பெர்ணான்டோ 3 வவிக்கெட்டுனக்களை சாயத்தார்.

பின்னர் 185 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த ஜப்னா கிங்ஸ் அணிக்கு ஆரம்ப வீரரான பெத்தும் நிசங்க கோல்ட் என்ட் டக் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் மற்றைய ஆரம்ப வீரரான குசல் மெண்டிஸுடன் இணைந்த ரைலி ரொஸ்ஸோ காலி அணியின் பந்துவீச்சாளர்களை சுவம்சம் செய்தார். இவ்விருவரும் தத்தமது அரைச்சதங்களைக் கடக்க ஜப்னா கிங்ஸ் தமது சதத்தை கடந்து வெற்றியை அண்மித்தது.

இந்நிலையில் இத் தொடரில் தனது முதல் சதத்தினை பதிவு செய்து அசத்திய ரொஸ்ஸோ 2ஆவது விக்கெட்டிற்கான குசால் மெண்டிஸுடன் இணைந்து பிரிக்கப்படாத 185 ஓட்டங்களைப் பகிர ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று 26 பந்துகள் மீதமிறுக்க 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் 4ஆவது முறையாகவும் லங்கன் பிரீமியர் லீக் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது. இறுதி வரை களத்திலிருந்த ரொஸ்ஸோ 7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 9 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 53 பந்துகளில் 106 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களையும் விளாசிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *