உள்நாடு

ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்ந்திருப்பதே பொருளாதார மீள் எழுச்சியை வெற்றிகரமாக முன்னெடுக்கும்..! -ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்

கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியின் திறமையே முக்கிய பங்களிப்பை வழங்கியதாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நியச்செலாவணி கையிருப்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் விகமணிக ஹரசற எனும் நிகழ்ச்சி நேற்று (21) குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட், தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது,
கடந்த 2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதி பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அத்தியாவசியப்பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து எரிபொருள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
அவ்வாறான நிலையில் இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இன்று இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறையாக புலம்பெயர் தொழிலாளர்களைக் குறிப்பிடலாம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைத் திறமையாக சமாளித்தது போன்றே , எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் மிக முக்கியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார். அவர் ஆரம்பித்து வைத்துள்ள இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க அவரது தலைமைத்துவத்தினால் மட்டுமே முடியும். அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் அவரது தலைமைத்துவம் தொடர்ந்திருப்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் மீண்டுமொரு தடவை அத்தியாவசியப் பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருக்க பொதுமக்கள் தயாராக இல்லை என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் தொடர்ந்தும் குறிப்பிட்டார்
இந்த நிகழ்வில் தொழில் உறவுகள்,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனூஷ நாணயக்கார, ராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, கால்நடை வளத்துறை ராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத், முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *