அநுராதபுரம், ஹொறவொப்பொத்தானையில் பாடசாலை மாணவர்களுக்கு மனித – யானை மோதல் பற்றிய விழிப்புணர்வு..!
ஹெல்ப் ஸ்ரீலங்கா அமைப்பினால் மனித யானை மோதலை தவிர்த்து நாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வொன்று அநுராதபுரம்,ஹொரவப்பொத்தான, மந்தாகனி மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற மேற்படி செயலமர்வில் மனித – யானை மோதல் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
யானையின் வாழிடம் மனிதர்களினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதனாலும், சேனைப்பயிர்ச்செய்கை, நவீன நகரமாக்கல், தொழிற்சாலைகள் அமைத்தல், இயற்கை நீர்நிலைகள் அழிக்கப்படுதல் காரணமாக காட்டில் சுதந்திரமாக நடமாடிய யானைகள் உணவு மற்றும் நீர் தேடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மனித உடமைகளை சேதப்படுத்துவதாலும், பெறுமதியான மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதாலுமே பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.
இந்த செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது, இது போன்ற ஒரு திட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதற்கான கதவுகளைத் திறந்தமை பாராட்டத்தக்க விடயமாகும். கிராமத்தில் உள்ள அடிமட்ட அமைப்புகளுடன் நேரடியாகப் பணியாற்றுவதை எதிர்காலத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு யானைகளின் மோதலை கட்டுப்படுத்த பல வழிகளை ஹெல்ப் ஸ்ரீலங்கா அமைப்பு மேற்கொள்ளவுள்ளது.
முக்கியமாக மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக யானை வேலிகளில் கவனம் செலுத்துகிறோம். இது விவசாயிகளை வேலி மற்றும் அதன் பராமரிப்பில் பயிற்சி பெற ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.
இந் நிகழ்வில் யானை-மனித மோதல் முகாமைத்துவம் தொடர்பான பிரதான உரையை களனி பேரதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் .சுதேஷ் ருவிந்த நிகழ்த்தினார்.
யானைகளுடன் மனிதர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர், அதிபர்கள் ஆகியோரும் அர்த்தமுள்ள உரைகளை வழங்கினர்.
நிகழ்வின் இறுதியில் சுற்றால் அதிகார சபையினால் நடத்தப்பட்ட நிகழ்வில் பச்சைப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சின்னமும் சூட்டப்பட்டது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)