உள்நாடு

அஷ்ஷேக் தமீம் நளீமி – அருமையாக வாழ்ந்த இளந்துடிப்புள்ள அசாதாரண ஆளுமை

கடந்த ஞாயிறன்று தனது சகபாடி நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள கிழக்கின் ஒலுவில் நோக்கி இதர வகுப்பு சகோதரர்களோடு பயணித்த சகோதரர் அஷ்ஷேக் தமீம் அவர்கள் எதிர்பாராத வகையில் தம்புள்ளையில் வைத்து ஏற்பட்ட திடீர் வாகன விபத்தால் தளத்திலேயே வபாத்தாகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்து தான் தீர வேண்டும்

ஆனால் சில மரணங்கள் வாழ்க்கை குறித்த யதார்த்தங்களை, உண்மைகளை அழுத்தமாக சொல்வதைக் காணலாம். சில மரணங்களை உடனடியாக எம்மால் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியாமல் இருக்கும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் செல்லும், உலகத்திலே வாழ்கின்ற பலரையும் பாதிக்கும் மரணமாக சில மரணங்கள் அமைந்திருக்கும், எல்லோரும் குறிப்பிட்டவரது கடந்த கால வாழ்வை திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் சில மரணங்கள் இருக்கும், எல்லோருக்குமான முன்மாதிரிகள் சில மரணங்களில் இருக்கும், இத்தகைய எல்லாவிதமான அம்சங்களும் நிரம்பி வழியக் கூடிய ஒரு மரணமாக ஜனாஸாவாக தமீமுடைய மரணத்தை அடையாளப்படுத்த முடியும்.

ஷாகுல் ஹமீத் ஸித்தி மர்ஜான் தம்பதிகளின் புதல்வர் இவர். 1997.12.05 ம் திகதி பிறந்துள்ளார்.
இவரது ஒரே ஒரு சகோதரர் சம்மில் தற்பொழுது கட்டுக்கஸ் தொட்ட நீர்ப்பாசனத்திணைக் களத்தில் பிரதான பொறியியலாளராக பணியாற்றுகிறார்

நுககஹ கெதர நூரானியா முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை மிகச் சிறப்பாக பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உயர் கல்வியை பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் இணைந்து பெற்றுக்கொண்டார்.

இவரது வாழ்வில் ஆரம்ப காலம் முதல் சில அபூர்வ விடயங்களை குடும்பத்தினர் அவதானித்திருக்கின்றனர். பொதுவாக குழந்தைகள் பிறந்து எழுந்து நின்று தவழ்ந்து நடக்க ஆரம்பிப்பதுதான் வழமை

ஆனால் இவர் ஆரம்ப முதல் நடக்க தாமதித்து
நடக்கும் பருவத்தில் ஓட ஆரம்பித்து இருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அன்று முதல் இறுதி வரை ஓடிக்கொண்டே இருக்கக்கூடியவராக
வாழ்ந்தார்.
இறுதி நாட்களில் பம்பரம் போல மிக வேகமாக சுழன்று நாட்டின் பல பாகங்களுக்கும் சன்மார்க்க பணிகளுக்காக பயணித்திருக்கின்றார்.

சிறுபராயத்தில் இருக்கும் பொழுது கிணற்றில் விழுந்து மயிரிழையில் உயிர் தப்பியவர்.
ஒரு மிடர் தண்ணீர் கூட அவரது வயிற்றுக்கு செல்லவில்லை என வைத்தீர்கள் ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர்.

குடும்பத்தில் சிறுபராயம் முதலே சகலருக்கும் உதவியொத்தாசை புரிவதில் முன் நின்று செயற்பட்டு வந்துள்ளார். எந்த விதமான பாகுபாடும் பாரபட்சமும் இன்றி எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றலையும் சிறுப்பராயம் முதல் பெற்றிருந்தார்.

அவரிடத்திலே மிகச்சிறந்த தலைமைத்துவப் பண்புகள், ஒழுங்கமைப்புத் திறன், மனிதர்களை கையாளுகின்ற, நிகழ்வுகளை கையாளுகின்ற, இன்னும் எண்ணற்ற சமுகத்திறன்கள், மென் திறன்கள் எல்லாமே அருளாக வாய்க்கப் பெற்ற நபராக சிறுவயது முதல் காணப்பட்டார்.

எந்த வேலையாக இருந்தாலும் தனக்கு பொறுப்புச் சாட்டப்பட்டால் அல்லது தானாக முன்வந்து செய்ய முற்பட்டால் கூட தன் வேலையாக, சொந்த வேலையைச் செய்வது போல கனகச்சிதமாக, நிரப்பமாக, முழுமையாக நேர்த்தியாக செய்து முடிக்க கூடியவராக காணப்பட்டார்.

எந்த வேலை தனக்கு கொடுக்கப்பட்டாலும் தன்னால் முடியாது தனக்கு நேரமில்லை அவகாசம் இல்லை தெரியாது பிறகு பார்ப்போம் என்று கூறவே மாட்டார்.

இதற்கு அண்மையில் நடைபெற்று முடிந்த அஹதியா இஸ்லாம் பாடப் பரீட்சை வினாத்தாள்களை தானே சுமந்து சென்று மதிப்பீடு செய்தமை சிறந்த சான்று.

சமூகநலப் பணிகளில் தன்னார்வத் தொண்டராக விருப்பத்தோடு ஈடுபட்டிருக்கின்றார். அவரது விருப்பமும் ஈடுபாடும் ஆசையும் ஆர்வமும் அருகில் இருப்பவரையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி விடக் கூடிய அளவுக்கு வசீகரமானதாக இருக்கும். ஆனால் ஒரு வார்த்தை கூட அடுத்தவர்கள் செயற்பட வேண்டும் என்று பலவந்தப்படுத்தவோ வற்புறுத்தவோ வலியுறுத்தவோ மாட்டார். அவராக முன் வந்து ஓடி ஓடி எல்லாப் பணிகளையும் அழகாக செய்து முடிப்பார்.

அவரிடம் காணப்பட்ட இன்னும் ஓர் அரிய பண்புதான் அவரால் சுமக்க முடியாத, செய்ய முடியாத, அவரது துறையோடு சம்பந்தப்படாத வேலைகளைக் கூட துறை சார்ந்த நிபுணர்கள் செய்து முடிப்பது போல செய்து முடிப்பார். அது எழுத்தாவணம் சார்ந்த பணிகளாக இருந்தாலும் சரி கள விஜயங்களாக இருந்தாலும் சரி, ஒழுங்கமைப்பு பணிகளாக இருந்தாலும் சரி ஒருங்கிணைப்பு பணிகளாக இருந்தாலும் சரி. அனைத்தையும் தேடி அறிந்து தெரிந்து கொண்டு செய்யக்கூடிய ஆற்றல் பெற்ற அபூர்வமான மனிதராக வாழ்ந்து இருக்கின்றார்.

 

இதற்கு அவரது விரிவுரையாளர்களும் சகபாடிகளும் நண்பர்களும் குடும்பமும் அவரோடு தொழில்துறை சார்ந்து பணியாற்றியவர்களும் அஹதியா தேசிய சம்மேளனத்தில் பணியாற்றியவர்களும் சான்றாக உள்ளனர்

அவர்களது விசேட ஆற்றல்களில் ஒன்று விருந்துபசாரங்களை திடீர் திடீரென ஏற்பாடு செய்து அதிலே அவராக சமைத்து கொடுப்பது தான்.

அவருக்கு எப்படி இந்த சமையல் கலை தெரியவந்தது என்று குடும்பத்தினரே ஆச்சரியப்படும் அளவு சுவையாக சமைக்க கூடியவராகவும் அவர் காணப்பட்டிருக்கின்றார்.

கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிவாயில்கள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குடும்பத்தினரை ஒன்றிணைத்து சமய சன்மார்க்க ஆன்மீக பணிகளில் அனைவரையும் ஈடுபடச் செய்ய ஒழுங்குகளை மேற்கொண்டு அதனை தலைமை தாங்கி வழி நடாத்தி உள்ளார். குறிப்பாக ரமழான் காலங்களில் அந்த ரமழானிய ஆன்மீக வாடையை குடும்பத்தினர் நுகர்ந்து அமல்களில் ஈடுபடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் குடும்பம் சார்ந்து செய்திருக்கின்றார்.

சுய கட்டுப்பாடு, சுய ஒழுங்கு, சுய உருவாக்கம் போன்ற விடயத்தில் கவனம் செலுத்தியதோடு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களது ஆன்மீக மேம்பாட்டு விடயங்களிலும் அதீத பங்களிப்பும் வழிகாட்டலும் செய்து வந்ததோடு தான் வாழ்ந்த கிராமத்து மக்களது மனங்களிலும் அந்த ஆன்மீக வாடை வீச வேண்டும் என்பதற்காக பாடுபட்டிருக்கின்றார். உழைத்திருக்கின்றார். பணியாற்றியிருக்கின்றார். பங்களித்திருக்கின்றார்.

இவற்றையும் கடந்து தேசிய ரீதியாக வளரிளம் தலைமுறையை மிகச் சிறப்பான முறையில் ஒழுக்க விழுமியங்களுக்கு உற்பட்டவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் அஹதியா மத்திய சம்மேளனத்தோடும் அதன் தேசிய தலைவர் உற்பட நிர்வாகிகளோடும் இணைந்து கொண்டு நாட்டின் சகல இடங்களுக்கும் பயணித்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கின்றார். குறிப்பாக அஹதியா தேசிய தலைவர்
அல்ஹாஜ் ஸரூக் அவர்களது ஆளுமைப் பண்பும் தலைமைத்துவ பண்பும் பேச்சாற்றலும் வழி நடத்தும் திறனும் தமீமை மிக நன்றாக கவர்ந்திருக்கின்றது.பாதித்திருக்கின்றது.

தான் ஏலவே பணியாற்றி வந்த இடத்திலிருந்து அதிகூடிய சம்பளத்தை பெற முடியுமாக இருந்தும் கூட சமூகப்பணியாற்ற மிகச்சிறந்த தலைமையாக ஸரூக் ஹாஜியார் அவர்களே மிகவும் பொருத்தமான ஆளெனக்கருதி அவருடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கின்றார்

குடும்ப ஒன்று கூடல்கள் தமது வகுப்பு தோழர்களது ஒன்று கூடல்கள்
பயணங்கள் சுற்றுப்பயணங்கள் அனைத்தையுமே
தானே முன்வந்து திட்டமிட்டு ஒழுங்கமைத்து பரிபூரணமாக செய்து முடிக்க கூடியவராக செயல்பட்டிருக்கின்றார். இயங்கி இருக்கின்றார்.

ஆக மர்ஹும் தமீம் அவர்கள் பன்முக ஆளுமையாக தொடராக இயங்கி வந்துள்ளார். ஓய்வின்றி அள்ளும் பகலும் அயராது செயற்பட்டு சமநிலைத் தன்மையோடு வாழ்ந்திருக்கின்றார்.

 

சிலரது வாழ்வு எமக்கு பாடமாக அமையும். இன்னும் சிலரது மரணம் எமக்கு படிப்பினையாக அமையும். தமீமைப் பொறுத்தளவில் அவர் மூன்று தசாப்தங்களுக்கும் குறைவான வாழ்வை ஆயுட் காலமாக கொண்டவர். ஆனால் அவரது முழு வாழ்வுமே எமக்கு மிகச்சிறந்த ஒரு செய்தியை சொல்லிவிட்டு செல்வதாக கூறலாம்.

வாழும்போது இறைவன் எமக்குத் தந்த அத்தனை ஆற்றல்களையும் திறமைகளையும் சமூகத்திற்காக பயன்படுத்தி மனித உள்ளங்களை சம்பாதித்து அதிலே குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மரணித்த பிறகு அவர்களுடைய பிரார்த்தனைகள் எம்மை வந்து சேரும். அது இயற்கையாக அமைய வேண்டும், இயல்பாக வரவேண்டும். அத்தகைய இயல்பான ஒரு வாழ்வைத் தான் தமீம் வாழ்ந்து விட்டு சென்றிருக்கின்றார்.

தமீம் உண்மையிலேயே அசாதாரண ஆளுமை தான். தன்னோடு பழகக்கூடிய சகலரையுமே ஒரே நேரத்தில் ஆகர்ஷித்து விடக்கூடிய ஆற்றலும் வலிமையும் அவரது பேச்சுக்கும், நடத்தைக்கும், பார்வைக்கும் இறைவன் கொடுத்திருக்கின்றான்.

எல்லோரையும் சமமாக மதிக்கின்ற அவருடைய பண்பு அவர் மீது சகலருக்கும் அன்பை, மதிப்பை, மரியாதையை ஏற்படுத்தி இருக்கின்றது. யாருடைய மனதையும் நோகடிக்காத வகையில் தான் தமீமுடைய நடத்தைகளும் பேச்சுக்களும் அமைந்திருக்கும்.

சகல விடயங்களிலும் அனுபவமும் ஆற்றலும் பெற்ற முதிர்ச்சி அடைந்த பழுத்த ஒரு மனிதர் போலத்தான் அவருடைய செயற்பாடுகள் காணப்பட்டன.

எல்லா இளவல்கள் போலவும் தமீமுக்கும் திருமண ஆசை; வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை மனதில் வேரூன்றித் தான் இருந்தன. வீடு கட்டுவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும், தளபாடப் பொருட்களையும் கூட தயார்படுத்தி வைத்திருந்தார். தனது திருமண மஹருக்காக சுமார் ஏழு லட்சம் பெறுமதியான நகையை கொடுக்க தீர்மானித்திருந்தார். தனது திருமணம் கூட இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க இருப்பதாக கூறிக் கொண்டிருந்தார். பலரிடமும் அதனை சொல்லியும் வைத்திருந்தார். ஆனால் எல்லாவற்றையும் விட இறை நாட்டம் முந்திவிட்டது. இறைநாட்டத்தை மனிதர்களால் முந்த முடியாது இறைவன் வழங்கிய ஆயுள் அதனுடைய தவணை முடிகின்ற பொழுது நிறைவடைந்து விடும்.

தமீமின் தனிப்பட்ட ஆளுமை பண்புகளாக நேரம் தவறாமல் தொடராக செயற்படுவது, எடுத்த பொறுப்பை முழுமையாக செய்து முடித்தல், வேலையிலே நேர்த்தி, கனகச்சிதம், திருப்தி, கூர்ந்த பார்வை, தெளிந்த சிந்தனை, போன்றன குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சங்கள்.

அதேபோன்று அவரது மனித உறவுகளை எடுத்துக் கொண்டாலும் எல்லோரையும் அரவணைத்து அனுசரித்து அன்பாக நடத்துகின்ற அற்புதமான ஆளுமைப் பண்பை அவரோடு பழகியவர்கள் கண்டு கொள்ளலாம். அது அவருடன் ஒரு நாள் பழகினாலும் ஒரு வருடம் பழகினாலும் சமனாகத்தான் இருக்கும்.

தனது இளமை காலத்தை சமூக சமய சன்மார்க்க பணிகளுக்காக கழிப்பதற்கு நீண்ட இரவுநேரப் பயணங்களை தொடராக மேற்கொள்ளக் கூடியவராக அவர் காணப்பட்டார். அவரோடு பழகியவர்களுக்கு அது மிக நன்றாக தெரியும்.

பாடசாலைக் காலத்திலும் சமூகப் பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பாடசாலைக்கு பிற்பாடு தனது உயர் கல்வியைத் தொடர்வதற்காக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் இணைந்து கொண்டது முதல், அங்கு தனது சக பாடிகளோடும் மூத்த சகோதரர்களோடும் அடுத்தடுத்த வருடங்களில் இளைய சகோதரர்களோடும் மிக நெருக்கமான உணர்வுபூர்வமான தொடர்பாடலைப்பேணி வந்தார்.

மனித வள முகாமையாளராக தொழில் சார்ந்து வாண்மை சார்ந்து பணியாற்றுகின்ற அவருடைய தொழில் சார்ந்த நண்பர்களும் நபர்களும் அவரிடத்திலே அசாதாரண மனித வள முகாமைத்துவத் திறன் காணப்பட்டதை சிறப்பித்து சிலாகித்து கூறுவர்.

பல்கலைக்கழக வாழ்விலும் நண்பர்கள் சக பாடிகள் விரிவுரையாளர்கள் என எல்லோரோடும் மிக நெருக்கமான தூய்மையான அந்நியோன்ய உறவைப்பேணி வந்தார்.

தன்னைவிட பிறரை மதிக்கின்ற முற்படுத்துகின்ற பிறரது தேவைகளை, பிறரது வேண்டுகோள்களை முன்னின்று முண்டியடித்துக் கொண்டு செய்து கொடுத்து விட்டு தான் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆசையும் ஆதங்கமும் அவரிடத்திலே எப்பொழுதும் காணப்பட்டன.

அதேபோன்று வளாகத்தில் கல்வி சார் செயற்பாடுகளுக்கு அப்பால் இதர இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஏனைய மனிதர்களோடு நடந்து கொள்கின்ற விடயங்களிலும் அவர் அபூர்வ நபராக காணப்பட்டார்.

நோயாளிகளை பார்வையிட செல்வதில் தன் நண்பர்களையும் இணைத்துக் கொள்வார். எண்ணற்ற பணிகளைத் தானே தலை மேல் சுமந்து செய்து வந்தார்.

வீட்டிலும் வீட்டை தாங்கி நிற்கின்ற முதுகெலும்பாக, தூணாக அவர் செயற்பட்டிருக்கின்றார்.

அவர் இல்லாவிட்டால் வீட்டிலே எந்த ஒன்றும் நடைபெறாது எனும் அளவு எல்லா விடயங்களையும் தன் முதுகில் சுமந்து தோளில் சுமந்து செய்து முடிக்க கூடியவராக இருந்தார்.

தனது நண்பர்கள் விடயத்திலும் கண்ணியமாக நடந்து கொள்ளக் கூடியவராக காணப்பட்டார். அதேபோன்று வகுப்பறை நண்பர் குழுமத்தில் முன் நின்று இயங்கக்கூடிய எல்லா விடயங்களையும் ஒருங்கிணைக்க கூடிய அச்சாணியாக நின்று செயற்பட்டிருக்கின்றார்.

தன் பணியிலே எந்தவிதமான சலிப்போ அலுப்போ அசௌகரியமோ அவருக்கு ஏற்படாது. விருப்பத்தோடு, ஆசையோடு, ஆர்வத்தோடு, தானே முன்வந்து அனைத்தையும் மேற்கொள்ளக் கூடியவராக இருந்தார்.

குடும்ப ஒன்று கூடல்களாகட்டும், விருந்துகளாகட்டும், பயணங்களாகட்டும், இதர செயல்பாடுகளாகட்டும், தமீம் இல்லாவிட்டால் எல்லாமே பூச்சியமாகிவிடும் எனும் அளவு எல்லா விடயத்திலும் தன்னுடைய பணியை, பங்களிப்பை பரவலாக்கி இருந்தார்.

தன்னுடைய சொந்த பணிகளுக்கு அப்பால் குடும்பத்தாரோடும் மிக நெருக்கமான தொடர்பை அவர் பேணி வந்திருக்கின்றார்.

தொழில் செய்கின்ற இடத்திலும் எல்லோரையும் மதிக்கின்ற எல்லோரது அன்பையும் வென்ற எல்லோரது உள்ளத்திலும் வாழ்கின்ற ஒரு நிலையை அவர் உருவாக்கி இருக்கின்றார்.

எப்பொழுதும் புன்னகையோடு நல்ல வார்த்தைகளை பேசக்கூடியவராக நல்லெண்ணம் வைக்க கூடியவராக மௌனத்தை கடைபிடிக்க கூடியவராக தேவையின் பொழுது மாத்திரம் பேசக்கூடியவராக காணப்பட்டார்.

எந்த ஒருவரையும் மனம் நோக, புண்பட பேசுவதற்கு முன் வர மாட்டார்.

விடுமுறை காலத்தில் வீடு சென்றால் கூட பள்ளிவாசலின் எல்லா பணிகளையும் ஒரு நிர்வாக சபை உறுப்பினர் செய்வதுபோல முன்வந்து செய்து கொண்டிருப்பார்.

தன்னுடைய கிராமத்திலே மாணவர்களது வாசிப்பித்திறனை மேம்படுத்துவதற்காக ஒரு நூல் நிலையத்தை ஏற்பாடு செய்து அதற்கு புத்தகங்களை பெற்றுக் கொடுக்கவும் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டிருக்கின்றார்.

சமய விழிப்புணர்வுக்காக இஸ்லாமிய வகுப்புகளை நடத்தி வந்திருக்கின்றார்.

அதேபோன்று தான் கற்ற இஸ்லாமிய கல்வியை சமூகத்திற்கு கொடுக்க வேண்டும். என்ற கடப்பாட்டை எப்பொழுதும் தன் மனதில் சுமந்தவராகத் தான் அவர் வாழ்ந்திருக்கின்றார். தன்னால் முடியுமான இஸ்லாமிய வகுப்புகளை செய்து வந்திருக்கிறார். அதற்காக நீண்ட பயணங்களை செய்திருக்கின்றார். தன்னை அதற்காக தயார்படுத்தி இருக்கின்றார். தன்னை சூழ்ந்திருந்த சகோதரர்களை இஸ்லாமிய பணியின் பால் ஊக்கப்படுத்தி ஊக்குவித்து உற்சாகப்படுத்தி இருக்கின்றார். அதற்குரிய ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

அதேபோன்று சமூக பணிகளுக்கு அப்பால் சமயம் சார்ந்த தன்னுடைய கட்டாய பணி என்ற வகையில் தேசிய அஹதியா சம்மேளனத்தோடு இணைந்து எண்ணற்ற பயணங்களை அவர் மேற்கொண்டு இருக்கின்றார்.

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் மிகப் பாரிய பொறுப்பை சுமந்து செவ்வனே நிறைவேற்றி இருக்கின்றார்.

அஹதியா பரீட்சை குழுவிலும் அங்கத்தவராக உள்ளார். இறுதியாக நடைபெற்ற அஹதியா பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்.

தேசிய மட்டத்தில்
மாவட்ட ரீதியான அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திப் பயிற்சிகளை செய்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் அலுப்பின்றி சலிப்பின்றி தொடராக செய்து வந்திருக்கின்றார்.

வார இறுதி நாட்களிலே அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்ய ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து வந்திருக்கின்றார். இறுதியாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியில் கிட்டத்தட்ட 200 அஹதியா அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இரு வேறுபட்ட நிகழ்ச்சிகளை கிண்ணியா மத்திய கல்லூரியிலும்,
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கிண்ணியா பிரதேச சபையிலும் ஒழுங்குபடுத்தி அதிலும் கலந்து கொண்டார்.(அதில் அவருடன் நானும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்றாக பயணித்தேன்)

அடுத்தடுத்த வாரங்களில் புத்தள அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கும் பொலன்னறுவை அஹதியா பாடசாலை ஆசிரியர்களுக்கும் வாண்மை விருத்தி செயற்பாடுகளை, பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்குரிய திட்டமிடலை செய்து வந்தார்.

தனது தொழில் வாண்மை சார்ந்தும் அதற்குரிய கற்கைகளை உரிய முறையில் சிறப்பாக தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே பணியாற்றிய இடத்திலிருந்து தனது பதவியை முழுமையாக ராஜினாமா செய்து தன்னுடைய பணிகளை மிகச் சிறப்பாக முடித்துவிட்டு சகலதையும் உரியவர்களிடம் கவனமாக ஒப்படைத்து விட்டு கொழும்பில் இருக்கின்ற மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் இணைந்து ஒரு வார அளவில் தான் அவர் இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டிருக்கின்றார்.

 

வளரிளம் தலைமுறைக்கு மிகச்சிறந்த துடிப்பான முன்மாதிரிமிக்க இளைஞராக அவருடைய வாழ்வும் வாலிபமும் கழிந்திருக்கின்றது என்பதற்கு அவருடன் கூடவே இருந்தவர்கள் பயணித்தவர்கள் செயல்பட்டவர்கள் சேர்ந்து நடந்தவர்கள் பழகியவர்கள் கற்றவர்கள் சான்றாக இருக்கின்றார்கள்.

அவருடைய இழப்பு சமூகத்திற்கு மிகப் பெரும் இழப்பாக இருக்கும். அதே போன்று அவருடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தேசிய அஹதியா சம்மேளனத்துக்கும் குருநாகல் மாவட்ட அஹதியா நிர்வாக குழுவுக்கும் பாரிய இழப்பாக நிச்சயம் இருக்கும்.

இருப்பினும் அல்லாஹுத்தஆலா தீர்மானித்த பிரகாரம் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சந்தித்தே தீரும் என்ற அடிப்படையில் அவர் மரணத்தை சந்தித்திருக்கின்றார்.

இந்த சமூகத்திற்கு சமூகத்திலே வாழ்கின்ற இளைஞர்களுக்கு மார்க்கத்தை சுமந்தவர்களுக்கு சமூக பணிகளில் தம்மை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றவர்களுக்கு அழுத்தமான ஒரு செய்தியை அவர் சொல்லிச் செல்கின்றார். அதுதான் எமக்கு தரப்பட்ட ஆயுளை அல்லாஹுத்தஆலா விரும்புகின்ற பிரகாரம் நாம் கழிக்கின்ற பொழுது எங்களுடைய வாழ்வை, பணிகளை, எண்ணங்களை அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்வான். அதற்குரிய பெறுமானத்தைக் கொடுப்பான். நல்ல பணிகளை ஆற்றுகின்ற பொழுது இறை உதவி நிச்சயம் இருக்கும். அத்தகையவர்கள் பற்றிய நல்லெண்ணத்தை குறிப்பிட்டவர்களது மரணத்தை அடுத்து இறைவன் உணர்த்தி விடுவான்.

சமூகத்தில் இத்தகைய சமூக உணர்வும் வரலாற்று உணர்வும் சுய கட்டுப்பாடும் சுயேட்சையாக இயங்கும் தன்மை கொண்ட இளைஞர்களும் உருவாக்கப்பட வேண்டும்.

தமக்காக மாத்திரம் வாழாமல் சமூகத்திற்காக வாழ்கின்ற அந்த உயர்ந்த குணம் கொண்டவர்களாக இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும். வேடிக்கை வினோதங்களில் மாத்திரம் வாழ்க்கையை அழித்தும் கழித்தும் அனுபவித்தும் வருவதனை விடவும் இந்த உலகத்திலே உருப்படியான பணிகளுக்காக நேரத்தை காலத்தை திறமைகளை ஆற்றல்களை செலவிட வேண்டும். அடுத்தவர்களுக்காக வாழ வேண்டும். சமூக முன்னேற்றத்தின் பங்காளியாக மாற வேண்டும். சமூகத்திலே ஆற்றுவதற்கு எண்ணற்ற இடைவெளிகள் நிரம்பி இருக்கின்றன. அந்த இடைவெளிகளை எல்லாம் நிரப்ப வேண்டிய தார்மீக கடப்பாடு மார்க்கத்தை கற்ற சகலர் மீதும் இருக்கின்றது என்ற செய்தியை இளம் துடிப்புள்ள செயற்பாட்டாளராக இருந்து தமீம் உலகிற்கு செய்தியாக சொல்கின்றார்.

அல்லாஹுத்தஆலா அவருடைய பணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய இழப்பால் வாடுகின்ற குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் அமைதியை பொறுமையை கொடுக்க வேண்டும். அவருடைய பணிகளை ஏற்று மீஸான் தராசில் பாரமானதாக அமைக்க வேண்டும். அவருடைய மண்ணறை வாழ்வை ஒளி நிரம்பிய வாழ்வாக ஆக்க வேண்டும். மண்ணறையின் நெருக்குவாரங்களை விட்டும் அவரைக் காக்க வேண்டும். மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக ஆக்க வேண்டும். நரகப் படுகுழியாக மாறுவதை விட்டும் அவரை பாதுகாக்க வேண்டும். மறுமையிலே உயர்ந்த சுவனத்தை நிரந்தரமாக பெற்று ஸித்தீக்கீன்கள் ஷுஹதாக்கள் ஸாலிஹீன்கள் நல்லடியார்களோடு இணையக்கூடிய பாக்கியத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். அவரைப் போன்ற இளைஞர்களை இந்த சமூகத்திற்கு தர வேண்டும்.

அவரது இறுதிக் கட்ட வேலைகளை செய்வதில் முனைப்புடன் ஈடுபாடு கட்டிய சகலருக்கும் குடும்பம் சார்பாக நன்றிகளை கூறிக் கொள்கின்றேன்


அஷ்ஷேக் M.M.A. Bisthamy ( Naleemi )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *