2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS..!
8 ஜூலை 2024, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை தடகள அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக MAS நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், இலங்கை ஒலிம்பிக் குழுவினருக்கு உத்தியோகப்பூர்வ ஆடைப் பொதிகளும் வழங்கப்பட்டன. எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை வெற்றிகரமாக பிரதிநிதித்துவப்படுத்த இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை அடையாளம் கண்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் MAS நிறுவனத்தின் முயற்சியான MAS விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான பயிற்சி அக்கடமியின் தொடக்கமும் இந்த நிகழ்வோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்
நடைபெறவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை அணி சார்பில் கலந்துகொள்ளவுள்ள இறுதி அணி வீர வீராங்கனைகளின் விபரங்களை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. இந்த வருடம் ஆறு பேர் கொண்ட குழுவில் மூன்று தடகள வீரர்களான தில்ஹானி லேகம்கே, தருஷி கருணாரத்ன மற்றும் அருண தர்ஷன இரண்டு நீச்சல் வீரர்களான – கைல் அபேசிங்க மற்றும் கங்கா செனவிரத்ன மற்றும் ஒரு பூப்பந்து வீரரான விரேன் நெத்தசிங்க ஆகியோர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
MAS Holdings இன் இணை நிறுவுனர் மற்றும் தலைவர் தேசமான்ய மஹேஷ் அமலியன், இலங்கை தடகள அணியினர் குறித்து பாராட்டி கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான சில காலகட்டங்களைத் தொடர்ந்து, இலங்கையின் ஒலிம்பிக் உணர்வைப் பேணுவது இப்போது என்றும் இல்லாத வகையில் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், உலக அரங்கில் சிறந்து விளங்க ஒரு புதிய தலைமுறையைக் கொண்ட இலங்கையர்களை ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். இந்த வருட தேசிய அணி வீரர்களுக்கு பாரிஸில் வெற்றி பெற நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இந்த இளம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒன்று திரளுமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார்.
தடகள அணியின் ஆடைகள் MAS நிறுவனத்தின் துணை நிறுவனமான Bodyline Pvt. Ltd நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த வடிவமைப்புகள், Ambekke தேவாலயத்திலுள்ள பண்டைய சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள பண்டைய இலங்கை தற்காப்புக் கலையான Angampora வை பிரதிபலிக்கின்றது.
அக்கடமி குறித்து பேசிய தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என்பது எந்தவொரு விளையாட்டு வீர வீராங்கனையினதும் கனவாகும். அடுத்த தலைமுறை ஒலிம்பியன்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது, மேலும் இந்த ஆண்டிற்குரிய குழுவைப் பார்க்கும்போது, இந்த கனவு நனவாகும் என்பதை அவர்களுக்குக் காட்டக்கூடியதாக உள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் எங்கள் விளையாட்டு வீரர்களின் சிறப்பை இந்த அக்கடமியின் திறன்மிக்க செயற்பாடானது வெளிக்கொணரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
MAS விளையாட்டு வீரர் பயிற்சி அக்கடமி
8 வருட காலப்பகுதியில் 550 மில்லியன் ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்ட MAS விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான பயிற்சி அக்கடமி, இலங்கையில் தடகள வளர்ச்சிக்கான மிகப்பெரிய பொது-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) திட்டமாகும். இது விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய ஒலிம்பிக் குழு (NOCSL), இலங்கை தடகள சங்கம் (SLAA), இலங்கை பாடசாலை விளையாட்டு சங்கம் (SLOA) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும்.
திறமையான விளையாட்டு வீர வீராங்கனைகளை பாடசாலை மட்டத்திலிருந்து அடையாளம் கண்டு மேம்படுத்த அக்கடமி ஒரு விரிவான செயல்முறையைப் பயன்படுத்துகிறது. விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அந்தந்த பயிற்சியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் நிதி மற்றும் உபகரணங்களுடன், ஒருமுகப் பயிற்சி, உலகத் தரம் வாய்ந்த தடகள விளையாட்டு ஆடைகள், சர்வதேச தொடர்பாடல், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மேம்பாட்டுத் திட்டம் இதில் உள்ளடங்கும்.
“விளையாட்டு என்பது நமது இளம் தலைமுறையினரின் முழுமையான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது உடல் ஆரோக்கியம், மன நலவாழ்வு மற்றும் ஒத்துழைப்பு, தலைமைத்துவம், மீள்பதிவு திறன் போன்ற அவசியமான வாழ்க்கைத் திறன்களை வளர்க்கிறது. இந்த பயிற்சி அக்கடமியானது இலங்கையின் இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை களத்திலும் வெளியிலும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த அர்ப்பணிப்பாகும். இதுபோன்ற முயற்சிகள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிப்பதில் முக்கியமானவை” என கல்வி அமைச்சர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அக்கடமிக்குத் தெரிவுசெய்யப்பட்ட 56 உயர்தர விளையாட்டு வீர வீராங்கனைகளைக் கொண்ட முதல் குழு, தங்களின் சான்றிதழ்களைப் பெறுவதற்காக அவர்களின் பெற்றோர், அந்தந்த பயிற்சியாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களின் தற்போதைய செயல்திறன் மற்றும் பயிற்சி அளவீடுகள் போன்றவை, அவர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் முகமாகவும், மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் best-in-class டிஜிட்டல் Appஐ பயன்படுத்தி அக்கடமியால் கண்காணிக்கப்படும்.
இலங்கையில் விளையாட்டு வீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் MAS இன் தொடர்ச்சியான முயற்சிகளில் அக்கடமி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். Bodyline நிறுவனம் 2024 முதல் 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரை இலங்கை தடகள சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ளது. MAS நிறுவனத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடை வர்த்தகக் குறியீடான Lable இலங்கை பாராலிம்பிக் சங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குகிறது. இது, இலங்கை மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாற்றுத் திறன் செயல்பாட்டு உடைகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.