விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிப்பு…!

இலங்கை அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான சூரியக்குமார் யாதவ் தலைமையிலான குழாத்தினையும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான குழாத்தினையும் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்திய அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இம்மாதம் இறுதியில் இலங்கை வருகின்றது. இதில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் போட்டியிலும் , 28ஆம் திகதி 2ஆவது போட்டியிலும், 30ஆம் திகதி 3ஆவதும் , இறுதியுமான போட்டியிலும் பங்கேற்கவுள்ளது. இத் தொடர் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இத் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டிருக்க ரி20 உலகக்கிண்ணத் தொடருடன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச ரி20 இலிருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். அதன் காரணமான இந்திய ரி20 அணியின் புதிய தலைவரான நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சூரியக்குமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் துடுப்பாட்ட வீரர்களாக சிம்பாப்பே அணிக்கு எதிரான ரி20 தொடரில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த சுப்மன் கில் உதவித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகவும் செயற்படவுள்ளார். மேலும் ஜாய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட்காப்பாளர்களாக ரிஷப் பாண்ட் மற்றும் சஞ்செய் சம்சுங் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் சகலதுறை வீரர்களாக ரயான் பராக், சிவம் துபே,அக்ஷர் படேல், வொசிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஸ்னோயும் , வேகப்பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங், கலீல் அஹமட் மற்றும் முஹம்மது சிராஜ் ஆகியோர் கொண்ட இளம் பலமிக்க அணியை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் இவ் ரி20 தொடர் நிறைக்கு வந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இத் தொடரின் 2ஆவது போட்டி 4ஆம் திகதியும், 3ஆவதும் இறுதியுமான போட்டி 7ஆம் திகதியும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இத் தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடாத்துகின்றார். இவ் ஒருநாள் போட்டியின் உப தலைவராகவும் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் விக்கெட் காப்பாளரான ரிஷப் பாண்டுடன் கே.எல். ராகுல் உள்hங்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரர்களாக ரி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட குழாத்திலிருந்த வீரர்களில் ஹர்த்திக் பாண்டியா சொந்தத் தேவைக்காக விலகிக் கொள்ள மற்றைய சகலதுறை வீரர்கள் ஒருநாள் தொடருக்கும் இணைக்கப்பட்டுள்ளனர். சுழல்பந்துவீச்சை பலப்படுத்த குல்தீப் யாதவ் இணைக்கப்பட்டிருக்க, வேகப்பந்து வீச்சில் ரி20 குழாத்தில் இடம்பெற்றவர்களுடன் அறிமுக வீரரான ஐ.பி.எல் தொடரில் அசத்திய ஹர்சிட் ரானா உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் நம்பிக்கைக்குறிய வேகப்பந்துவீச்சாளரான ஜெஸ்பிரிட் பும்ராக்கு இத் தொடரில் முழுமையான ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ரி20 அணி

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), சுப்மான் கில் (பிரதி தலைவர்), யஷாஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், றியான் பராக், ரிசாப் பாண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்ஷார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மட், மொஹமட் சிராஜ்.

இந்திய ஒருநாள் அணி

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில் (பிரதி தலைவர்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிசாப் பாண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சிவம் தூபே, குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், றியான் பராக், அக்ஷார் பட்டேல், கலீல் அஹ்மட், ஹர்சித் ரனா


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *