உலகம்

டொனால்ட் டிரம்ப் கவனத்துக்கு….

உங்கள் காதோரம்
குண்டொன்று உரசிச் சென்ற
செய்தி படித்தோம்.
அதில் குருதி படிந்த
படம் பார்த்தோம்.
உங்கள் அருகே குண்டு துளைத்து
சரிந்து விழுந்தவரின்
முகம் பார்த்தோம்.

விதியா? சதியா?
பூடகமா? நாடகமா?
எதுவென்று ஆராய்ந்து பார்க்காமல்
உங்களுக்காகவும்
வருந்துகிறோம்.
ஏனெனில்,
நாங்கள் மனிதர்கள்.

கொலைக் கருவிகளை
ஏற்றுமதி செய்வது
உங்களது குலத் தொழிலாயிற்றே.
உலகெங்கும்
அவை கொன்றொழித்த
பல மில்லியன் அப்பாவிகள்
இப்போதேனும்
உங்களது நினைவுக்கு வருகின்றனரா?

பூமிப் பந்தில்
நீங்கள் கவிழ்த்த ஆட்சிகள்
நினைவுக்கு வந்தனவா?
உங்களது துப்பாக்கிகளை
ஏந்திய கரங்கள்
சுட்டுத் தீர்த்த ஆட்சியாளர்கள்
நினைவுக்கு வந்தனரா?

எங்கள் கண் முன்னே
ஒவ்வொருவராய்த்
தோன்றி மறைகின்றனர்.
ஏனெனில்,
நாங்கள் மனிதர்கள்.

கடைசியாய் காஸாவில்
இரத்தம் வழிய வழிய
துடித்துத் துடித்து இறந்த –
இன்னும்
இறந்தும் வாழ்ந்தும் கொண்டிருக்கும்
அத்தனை பேரினது அவலங்களும்…
அவர்தம் காயங்களும் கண்ணீரும்
பசியும் பட்டினியும்
ஓயாத அலைந்துழல்தல்களும்
எங்கள் மனங்களைக் குடைகின்றன.
நாங்கள் நிம்மதி இழந்திருக்கிறோம்.

ஏனெனில்,
நாங்கள் மனிதர்கள்.

எங்களுக்கு
கண்ணீர் இருக்கிறது.
காயம் இருக்கிறது
கவிதை இருக்கிறது
மனச்சாட்சி இருக்கிறது
மனிதம் இருக்கிறது.
ஏனெனில்,
நாங்கள் மனிதர்கள்.

நாங்கள்
எல்லோருக்காகவும் இரங்குகிறோம்;
மனம் கலங்கி அழுகிறோம்.
ஏனெனில்,
நாங்கள் மனிதர்கள்.

வரலாறு மீள்கிறது,
நினைவு நெடுமூச்செறிகிறது.

சிராஜ் மஷ்ஹூர்
15.07.2024

பின்குறிப்பு:
இதைக் கடித உறையில் இட்டு,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின்
விலாசத்தை அதில் எழுதி ஒட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *