ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பகுதி நேர வகுப்புக்குச் சென்ற ஆசிரியர் பணி நீக்கம்
பாடசாலை ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்தி வந்த அனுராதபுரம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.டப்ளியு.சமரகோன் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு நடத்தி வருவதாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனடிப்படையில் பணிப்பாளர் மற்றுமொரு உத்தியோகத்தர்கள் குழுவினருடன் குறித்த பாடசாலைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் பாடசாலை பதிவேட்டில் கையொப்பமிட்டு பாடசாலைகளுக்கு வெளியில் சென்று சாலியபுர பகுதியில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
குறித்த ஆசிரியர் எந்தவொரு பொறுப்பு வாய்ந்தவரினதும் அனுமதியின்றி இந்த ஆண்டு இது வரைக்கும் 26 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதனால் குறித்த ஆசிரியர் கடந்த (17) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)