விளையாட்டு

வடமேல் மாகாணத்தின் சம்பியன்களாக மகுடம் சூடி, தேசியத்தில் கால்பதிக்கும் கல்பிட்டி அல் அக்ஸாவின் மைந்தர்கள்

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டத் தொடரில் இன்று நிறைவுக்கு வந்த 20 வயதுக்குற்பட்டர்களுக்கான இறுதிப் போட்டியில் குருநாகல் மல்லியத்தேவ மொடன் பாடசாலை அணியை வீழ்த்தி வடமேல் மாகாணத்தின் சம்பியன் மகுடத்தினைத் தனதாக்கியதுடன் மீண்டும் தேசிய மட்டப் போட்டிக்கு தன் வரவை உறுதிப்படுத்தியது கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி.

இலங்கை பூராகவும் இடம்பெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்களில் வலயமட்டப் போட்டிகளின் முடிவில் தற்சமயம் மாகாண மட்டப் போட்டிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் வடமேல் மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் கடந்த 16ஆம் திகதி ஆரம்பித்து இன்று 19ஆம் திகதி வரை நாரம்பல நகர சபை மைதானம் மற்றும் சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா தேசிய பாடசாலை மைதானம் ஆகிய இரண்டிலும் இடம்பெற்றிருந்தது.

அந்தவகையில் ஆண்களுக்கான 20 வயதுக்குற்பட்ட உதைப்பந்தாட்டத் தொடரில் வலய மட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்றுக் கொண்ட மொத்தம் 24 பாடசாலை அணிகள் இம் மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன. அதற்கமைய புத்தளம் வலயத்தின் சம்பியன்களான கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி முதல் சுற்றின் முதல் போட்டி பையுடன் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். பின்னர் 2ஆது சுற்றும் பை முறையில் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டனர்.

அதற்கமைய காலிறுதி ஆட்டத்தில் கெகுனுகொல்ல தேசிய பாடசாலை அணியை போராடி வீழ்த்திய அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது. பின்னர் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வடமேல் மாகாணத்தின் பலமிக்க அணியாகப் பார்க்கப்படும் குருநாகல் மலியதேவ கல்லூரியை எதிர்த்தாடியது. விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி இடம்பெற்ற இப்போட்டி இரு அணிகளாலும் கோல் ஒன்றினைக் கூட உட்செலுத்த முடியாமல் போக கோலின்றி சமநிலை பெற்றது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி உதை வழங்கப்பட அதில் 4:3 என்ற பெனால்ட்டி உதைகள் அடிப்படையில் வெற்றி பெற்ற கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்டிக்குள் தடம்பதித்தது.

இந்நிலையில் மற்றைய அரையிறுதிப் போட்டியில் மாதம்பை அல் மிஸ்பா தேசிய பாடசாலை அணியை வீழ்த்திய குருநாகல் மல்லியத்தேவ மொடன் கல்லூரி அணி தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் பலமிக்க அல் அக்ஸாவை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது.

இதற்கமைய நாரப்பல நகர சபை மைதானத்தில் இன்று மாலை ஆரம்பித்த இறுதிப் போட்டியில் சம பலமிக்க இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்தின. இப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் முதல் கோலுக்காக மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டனர். இதன் விளைவாக முதல் பாதியில் குருநாகல் மலியதேவ மொடன் கல்லூரி முதல் கோலை பதிவு செய்து முதல் பாதியை 1:0 என தமது ஆதிக்கத்ததுடன் நிறைவு செய்தது.

பின்னர் ஆரம்பித்த தீர்க்கமான 2ஆது பாதி ஆட்டத்தில் பதில் கோல் அடிக்கும் முனைப்பில் அல் அக்ஸா தேசிய பாடசாலை வீரர்கள் தீவிரம் காட்ட அதை தடுத்தாடிய மல்லியதேவ மொடன் கல்லூரி மாணவர்கள் ஒரு கட்டத்தில் விதிமுறைகளுக்கு அப்பால் பந்தினைத் தடுத்தாட நடுவர் அதை உற்றுநோக்கி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பைக் கொடுக்க அதனை கோலாக மாற்ற போட்டி 1:1 என சமனானது. போட்டியின் முழு நேர ஆட்டமும் அதே கோல் கணக்குடன் நிறைவுக்கு வர வடமேல் மாகாணத்தின் சம்பியனைத் தீர்மானிக்க பெனால்ட்டி உதை வழங்கப்பட்டது.

இதில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 4 கோல்களை உட்செலுத்த , பலமிக்க குருநாகல் மலியத்தேவ மொடன் கல்லூரி அணி 3 கோல்களை மாத்திரம் கம்பம் அனுப்ப 4:3 என்ற பெனால்ட்டி கோல்களின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி ஆண்களுக்கான 20 யதுக்குட்பட்ட உதைப்பந்தபாட்டத்தின் சம்பியன்கள் மகுடத்தினைத் தனதாக்கியதுடன் மீண்டும் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தமது வரவை உறுதிப்படுத்தி அசத்தினர்.

இவ் வெற்றியின் சொந்தக்காரர்களான மாணவர்களையும், இவர்களைப் பயிற்றுவித்த ஆசியரியர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், இப்பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பெற்றோர் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அல் அக்ஸாவின் பழைய மாணவர்கள் கல்பிட்டி பிரதேச மக்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *