உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதே மக்களின் நாட்டம்!

வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் பொதுமக்கள் தௌிவாக இருப்பதாக வட மேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 2800 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் செயற்பாடு இரண்டு கட்டங்களாக நேற்று (17) குருநாகல் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
வட மேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் குறி்த்த நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றும் ​போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. வங்குரோத்து அடைந்த நாடு என்ற வகையில் சர்வதேச ரீதியில் நமது நாட்டுக்குப் பாரிய தலைகுனிவு ஏற்பட்டது.
ஆனால் அவ்வாறான தலைகுனிவில் இருந்தும், பொருளாதார சரிவில் இருந்தும் இந்நாட்டை மீட்டெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய தலைமைத்துவம் மிகப் பெறுமதியானது. தனி ஒரு மனிதராக முன்வந்து அவர் இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நனவாக்கும் வகையில் இந்நாட்டை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்
எந்த ஒரு நாடும் கூடுதலான அளவில் கல்விமான்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சரிவுகள் ஏற்படுவதை ஓரளவுக்கு தடுத்துக் கொள்ள முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புகின்றார். அதன் காரணமாகவே நம் நாட்டின் கல்வித்துறையில் பாரிய புரட்சியொன்றை ஏற்படுத்தும் வகையில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான சகல வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்காக பாரிய நிதியொதுக்கீடு வழங்கியுள்ளார்
அதுமாத்திரமன்றி காணியற்றோருக்கு காணி உரிமை, வீதி அபிவிருத்தித் திட்டங்கள், சுற்றுலாத்துறை மேம்பாடு என்று இந்நாட்டில் தற்போது பாரிய அபிவிருத்திப் புரட்சியொன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான மூல காரணம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முயற்சிகளேயாகும்.

அந்த வகையில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேவையற்றவராக இருந்த போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் , மீண்டும் அவரிடமே அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் தௌிவாக இருக்கின்றனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக வாரக் கணக்கில் வரிசைகளில் நின்ற காலங்களில் இந்நாட்டைப் பொறுப்பேற்று, பொதுமக்களின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதில் ஓடியொளித்த அரசியல் தலைவர்கள் , இன்று என்னதான் தலைகீழாக நின்றாலும் மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்க முடியாது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. அதனை யாராலும் மாற்றவும் முடியாது. இன்னொரு தடவை கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதி பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதன் மூலமாக மீண்டுமொரு பொருளாதாரச் சரிவு ஏற்படுவதைத் தடுத்து, நாட்டில் வரிசை யுகங்கள் ஏற்படுவதில் இருந்தும் பாதுகாப்புப் பெற்று, ஓரளவுக்கேனும் சுபீட்சமாக வாழ்வது மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக ரணில் விக்கிரமசிங்க மட்டுமே பொருத்தமான தலைவர் என்பதே இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் தற்போதைய தீர்மானமாகும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *