உள்நாடு

சகவாழ்வு பற்றிய அறிவுசார் செயலமர்வு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மட்டக்களப்பு பிராந்தியம் “அறிவுசார் செயலமர்வு – அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வழி” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை 2024 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் உள்ள சன் ஷைன் கிராண்ட் மண்டபத்தில் நடத்தியது.

இந்த நிகழ்வில் சமூக நல்லிணக்கத்தை சாத்திய படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய கருத்துக்களை கலந்து கொண்ட அதிதிதிகள் அனுபவப்பகிர்வாக முன்வைத்தனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி வி. குணபாலசிங்கம், பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் பேராசிரியர் த. ஜெயசிங்கம் ஆகியோர் வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார கண்ணோட்டங்களில் சகவாழ்வு குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.டி.எம். ரிஸ்வி மஜீதி செயலமர்வின் கண்ணோட்டத்தை வழங்கினார், அதேவேளை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அப்துல் வாஜித் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான சமீபத்திய முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிஸ்மி நிறுவனத்தின் தலைவர் எம்.பி.எம். பிர்தௌஸ் சமூக நல்லிணக்கத்திற்கான எதிர்கால பாதை பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார், மற்றும் ஓய்வுபெற்ற கல்வியாளர் ஏ.எம்.ஏ. காதர் தனது அனுபவப் பெருக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளர் ஏ.பி.எம். முஸ்தபா இஸ்லாஹி தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வு, மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கலாநிதிப்பட்ட ஆய்வாளர் எம். தௌபீக் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் மூத்த அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.


(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *